திருமூலர் திருமந்திரம் உரை எண் 30 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்:
எவ்வாறு வானில் உள்ள கருமேகமானது பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீதும்  மழையாக பொழிகிறதோ, அவ்வாறே இறைவனும் பாரபட்சம் இல்லாமல் தம்மை தடுத்தாட்கொள்வான் என்று நம்பிக் கொண்டு, இடைவிடாது வெளிப்பாட்டுக் கொண்டிருக்கும் அவன் அருளை  உணரும் வழி தெரியாமல் காலத்தை கடத்திக் கொண்டிருப்பார்கள் அவ்விவேகிகள்.

ஆன்நின்று அழைக்கு மதுபோல்:
பசிக்கு பால் வேண்டி கன்று அம்மா என்று அழைத்த அக்கணமே  எவ்வாறு தாய் பசுவானது தன் மடியில் இருந்து பாலை சுரக்குமோ,

என்நந்தியை நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே:
அவ்வாறே மழையை வாரி வழங்கும் கருமேகம் போல ‘நான்’ என்னும் தூய உணர்வாக ஒவ்வொருவர் உள்ளும் விளங்கிக் கொண்டிருக்கும் நந்தியன் பெருமான் ஞான வேட்கையுடன் அவனை அழைக்கும் அக்கணமே, குருவாக அவன் உள்ளேயே  வெளிப்பட்டு ஞான மழையை பொழிவான்.
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment