
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.
காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்:
பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.
ரூபா ரூபம்-ப்ரதிரூபோ-பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!
அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! என்று. இவ்வாறு ஒவ்வொரு உருவிலும் “இருக்கு” என்னும் சப்த ஸ்வரூப உணர்வாக, அதனதன் உருவினில் உருவாக, ஆனால் காண்பதற்கு அரிதிலும் அரிதாக இருக்கும் அவனை காண்பிக்கக் கூடிய உறவு என்று ஆருளர்?
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொள:
அத்தகைய உறவு என்பது “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்று அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளபடி, இறைவனே குரு என்னும் உறவாய் வந்து மட்டுமே, என்னுள் இருக்கும் அப்பரம்பொருளை என்னிலயே காண்பிக்க முடியும். அவ்வாறு காண்பிக்கப்பட்ட பின்னர், உயிரோடு இம்மெய் இரண்டற கலந்து உயிர்மெய் எழுத்தாக மாற நாணி நிற்காது.
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து:
இவ்வாறு ஆதியில் புள்ளியுடன் கூடிய மனக்குறையுடன் தோன்றிய இம்-மெய்யில், அதாவது இவ்- உடம்பில் உள்ள குறைபாடு, உயிராய் விளங்கும் பரம்பொருளுடன் இரண்டறக் கலக்கப் பெற்று உயிர் மெய் எழுத்து ஆகி குற்றமில்லாத குணவானாக, அதாவது ‘கோணநில் லாத குணத்தடியாராக’ ஆகும்போது,
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே:
அத்தகைய நல்லடியார் உள்ளத்தில் அவன் ஆணி அடித்தால் போல் ஆழப் பதிந்து வீற்றிருப்பான்.
திருச்சிற்றம்பலம் 🙏

