
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான் அடிப் புண்ணிய மாமே.
தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்:
மனிதப் பிறவி உருவாக காரணமான ஆதிமூலமான உயிர் வித்தை, குருவருளால் வாசியை திருவாசியாக மாற்றி, அதன் மூலம் இடைவிடாது அவனை தொடர்ந்து நின்று, சிவாசிவா என்று இடைவிடாது அடுத்தடுத்து தொழுது கொண்டிருந்தால்,
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்:
ஆதிமூலத்தின் உயிர்சக்தி, சிவாசிவா என்னும் திருவாசியின் வழியாக, பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்ச பிராணங்கள், மனம், புத்தி, அகங்காரம் என்னும் உடம்பில் உள்ள பதினெட்டு விதமான தன்மைகளுக்கும் படர்ந்து பரவி, பரிபாரக: இத்தன்மைகள் அனைத்தையும் ஆளுபவனாக ஆகும்போது,
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான் அடிப் புண்ணிய மாமே:
தாமரை வடிவான நாபிக் கமலத்தில் குடி கொண்டிருக்கும் ஆதிமூலம் பதினெட்டு தன்மைகள் கொண்ட படிகளையும் கடந்து, நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளியாக முக்கண்ணனாக அமர்ந்திருப்பான்.

சபரிமலையில் 18 படிகளைக் கடந்து மேலே சென்றால் ஐயப்ப ஜோதியை காணலாம் என்பது ஐதீகம். அதாவது இத் தேகத்தில் விளங்கிக் கொண்டிருக்கும் 18 விதமான தன்மைகளை கடந்து நெற்றிக்கு நேரே போகும்போது, ஐந்துக்கும் அப்பனாக விளங்கிக் கொண்டிருக்கும் ஐயப்ப ஜோதியை அனைவரும் காணலாம்.
திருச்சிற்றம்பலம் 🙏

