
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம்
ஆற்றியது தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.
மனித வாழ்க்கையில் அனைவருக்கும் இரண்டுவித பாதைகள் உள்ளன, ஒன்று இறுதியில் மரணத்திற்கு வழிவகுப்பதும், அகலமானதும், எளிதானதும், மற்றொன்று மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வழிவகுக்கும் குறுகலானதும், கடினமானதுமாகும். பொதுவாக எல்லா மனிதர்களும் பிறந்தால் இறந்து தான் ஆக வேண்டும் என்பதை ஒரு நியதியாக முழுமையாக ஏற்றுக் கொண்டதால், திருத்தப்படாத வாசியிலேயே, அதாவது வாசி யோகத்தை பற்றி அறியாமல் அகலமான பாதையிலேயே போய்க்கொண்டிருப்பார்கள்.
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே:
மாறாக பிறவாமையை வேண்டுபவர்கள் வாசியை திருவாசியாக குரு அருளால் மாற்றி இசைத்து, நின்ற அவ்வழியே ஈசனை நெருங்குவார்கள்.
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி:
அவ்வாறு நின்ற அவ்வழியிலேயே அவனை இடைவிடாது துதித்துப் போற்றி புகழ்ந்து இசைபாடிக் குறையில்லா நிறை உடைய தூயவனான அவனின் திருவடியை தினந்தோறும் மறவாது மனதில் இருத்தித் துதிப்பதில் உறுதியாக இருந்து,
தேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம் :
அத்தகைய இசையின் மூலம் ஈட்டிய செல்வம் எல்லாம் சிவன் சேவைக்கே உரியது என்று நினைத்து, ஈதலாக செயல்பட்டு வாழ்ந்தால், அது அவர்களின் உயிர்க்கு ஊதியமாக சிவனருளால் கிட்டும்.
திருச்சிற்றம்பலம் 🙏

