
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.
வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்:
வன்னி என்றால் நெருப்பு , வாரணம் என்றால் கடல் என்றும் பொருள் உள்ளது. வன்னிக்கும் வாரணத்திற்கும் அதாவது நெருப்பிற்கும் கடல் நீருக்கும் இடையில் வல்லவனாக இருக்கும் இறைவன்…
எவ்வாறு உலகின் பெரும் பகுதி கரை இல்லாத கடல் நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதனால் நிலத்திற்கு எந்த பாதிப்பும் உருவாகாதபடி இவ்விரண்டுக்கும் இடையில் நின்று காத்துக் கொண்டு இருக்கிறானோ,
அவ்வாறே ஒவ்வொருவர் தேகத்தின் உள்ளும் பெரும்பகுதி கரை இல்லாத நீரினால் சூழப்பட்டிருந்தாலும், அதே தேகத்தில் உண்ணும் உணவை எரித்து சக்தியாகும் நெருப்பிற்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல், இரண்டுக்கும் இடையில் வல்லவனாக நின்று,..
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை:
உணர்ந்தவர் உணராதவர் என்னும் பாகுபாடு இல்லாமல், நீதிமானாக ஒவ்வொரு உடம்பின் உள்நின்று, நெருப்பையும் நீரையும் அதனதன் ஸ்தானங்களில் நில் என்று நிறுத்தி வைத்து…
அல்லும் பகலும் அருளுகின் றானே:
அதன் மூலம் உடம்பின் சமநிலையை இரவும் பகலும் இடைவிடாமல் காத்துக் கொண்டிருக்கும் அவனின் அருளை…
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அறியாமையால் தம்முள் உணர இயலாதவர்களுக்கு ஈசன் இல்லை எனும் வேண்டப்படாதவனாகவே இருந்து கொண்டிருப்பான்
திருச்சிற்றம்பலம்🙏

