
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
ஆதியு மாய்அர னாய்உடல் உள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்துஇருந் தான்அருட்
சோதியுமாய் சுருங்காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்தம் ஆகிநின் றானே.
ஆதியு மாய்அர னாய்: தாயின் வயிற்றில் கரு உருவாக காரணமான ஆதியுமாகவும், உருவான கருவுக்கு அரனாகவும் விளங்கி,
உடல் உள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்துஇருந் தான்:
அக்கருவில் உள்நின்று பஞ்ச பூதங்களின் தன்மைகளை கொண்டு, பஞ்ச கர்மஇந்திரியங்கள், பஞ்ச ஞானஇந்திரியங்கள், பஞ்ச வாயுக்கள், மனம், புத்தி, அகங்காரம், என்ற பதினெட்டு வித தன்மைகள் கொண்ட உடம்பாக விரிவடையச் செய்யும் வேதிப் பொருளாக ஆகி ,சுருக்கம் இல்லா அருட்பெருஞ்ஜோதியாக ஒவ்வொரு உடம்பின் உள்ளிருந்தும் இருந்து கொண்டு ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.
இப்பிரபஞ்சத்தில் உள்ள சூரியன், சந்திரன் மற்ற நட்சத்திரங்கள், மற்றும் ஒளிரக்கூடிய தன்மை கொண்ட யாவுமே சுருங்கி போகும் தன்மை கொண்டவைகளேயாகும்.
ஆனால் அருட்பெருஞ்ஜோதியாக ஒவ்வொருவர் தேகத்தில் உள்ளிருந்து ஒளிரும் பரம்பொருள் எக்காலத்தும் சுருங்காத் தன்மை கொண்ட ஒளிர் விளக்காகும்.
நீதியு மாய்நித்தம் ஆகிநின் றானே. சுருக்கமில்லா ஜோதியை தொடர்ந்து கூடும் உயிர்களுக்கும், கூடாத உயிர்களுக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி அருள் பாலிக்கும் சிறந்த நீதிமானாக, நித்தம் ஆகி நின்றானே.
திருச்சிற்றம்பலம்🙏

