
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்அளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்அளந் தான்தன்னை மேல்அளந் தார்இல்லை
கண்அளந்து எங்கும் கடந்துநின் றானே.
மண் அளந்தான்- மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு ஈரடியால் விண்ணையும் மண்ணையும் அளந்து பின் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு அவன் தலையில் அடி வைத்தவன் திருமால், மலரவன்- தாமரை மலரில் இருக்கும் பிரம்மன்
“படி அடி வான்முடி பற்றினும் தோற்றா
அடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி”
என்று அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளல் பெருமான் பாடியபடி, ‘படி அடி வான்முடியை’ இவ் -அயனும், மாலும் பற்றினாலும்…
தோற்றா: அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசம் எல்லையில்லாமல் இடைவிடாது வியாபித்துக் கொண்டே போவதால் தான், அஃது ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’ என மாணிக்கவாசக பெருமானாலும், வள்ளல் பெருமானாலும் புகழ்ந்து பாடப்பெற்றுள்ளது. ஆகவே அயனானா லும், திருமாலாலும் ‘படி அடியும் வான்முடியும்’ பற்றப்பட்டாலும் கூட…
அருட்பெருஞ்ஜோதியின் ‘அடிமுடி’ என்பது எல்லை என்பதே இல்லாமல் வியாபித்துக் கொண்டே போவதால், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் இவர்களால், இவனின் ‘படி அடியும் வான்முடியும்’ பற்றப்படாததாகவே, அதாவது நினைக்கப்படாததாகவே இருந்து கொண்டிருக்கிறது.
அதாவது கால வெளி என்பதற்கு முன்பிருந்தே ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆத்ம பிரகாசத்தை, கால வெளிக்கு உட்பட்டதாக கருதி அடைய முயல்வது என்பது இயலாத ஒன்று என்பதே இதன் மெய்ப்பொருள்.
திருச்சிற்றம்பலம்🙏

