திருமூலர் திருமந்திரம் உரை 8 ன் விளக்கம்:


தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லபின் தாழ்சடை யோனே.

“தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை”
ஒவ்வொரு மானிட தேகமும் நீரினாலேயே சூழப்பட்டுள்ளது. இந்நீரே இத்தேகத்தில் உருவாகும் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துக் கொண்டிருக்கின்றது. இந்நீரின் மற்றும் நெருப்பின் இயக்கங்களுக்கு உயிர்ப்பு எனும் உள் மற்றும் வெளி மூச்சுக்களே காரணமாகின்றது.
அதாவது ஒவ்வொரு உள்மூச்சும் நீரினில் கலந்து  நீரின் சக்தியாக ஆகும்போது “புனலினும் தண்ணியன்” ஆகவும், அதாவது  நீரில்  குளிர்ச்சியாகவும், 
அதேபோல் வெளிவிடும் ஒவ்வொரு வெளிமூச்சும், நெருப்பினுள்  கலந்து நெருப்பின்  சக்தியாக  ஆகும்போது “தீயினும் வெய்யன்” ஆகவும், அதாவது நெருப்பின் உஷ்ணத்தின் உஷ்ணமாகவும் வெளிப்பட்டு, இத் தேகத்தை சமநிலையில் வைத்துக் கொண்டிருந்து  அருள்பாளித்துக் கொண்டிருந்தாலும், அவன் அருளை அறிவார் ஒருவரும்  இல்லை.

சேயினும் நல்லன்:  எவ்வாறு ஓர் குழந்தை என்பது நல்லது கெட்டது என்னும் பாகுபாட்டை அறியாதோ, அவ்வாறே அவன் அருளை அறியாவிட்டாலும் கூட அவன் சேயைப் போல் அனைவருக்கும் பொதுவான நல்லவனாகவே இருப்பான்.

அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லபின் தாழ்சடை யோனே:
அணியன்: என்றால் நெருக்கமானவன் என்று பொருள், அதாவது அவனின் அருளின் செயல்பாட்டை இடைவிடாது தன்னில் உணர்ந்தவர் எவரோ, அவர்களே அவனுக்கு நெருக்கமானவர்கள் ஆவார்கள். அத்தகையவர்களை எவ்வாறு தாயானவள் தன் சிசுவை பத்து மாதம் தன் கர்ப்பத்தில் வைத்து காக்கின்றாளோ! அவ்வாறே அவர்களது உயிரை தாயைப் போல் அழியாப் பெருநிலையில் என்றென்றும் வைத்து காத்தருள்வான்.
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment