திருமூலர் திருமந்திரம் உரை எண் 3: விளக்கம்:

“ஒக்க நின்றானை உலப்பிலி தேவர்கள் நக்கன்என்று ஏத்திடு நாதனை நாள்தோறும்
பக்க நின்றார் அறியாத பரமனைப்    

புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே”

ஒக்க: என்பதற்கு ஒரு சேர, சரிசமமாக என்று பொருள்கள் உள்ளது. அரிதற்கு அரிதான மானுடப் பிறப்பு கிடைக்கப்பெற்ற, அதாவது மெய்யுடன் உயிர் கலந்து உயிர்மெய் எழுத்தாக, சிவஜோதியாக ‘ஒக்க’ நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கும்  மானுட வடிவம் கொண்ட பரம்பொருளின் மகிமை பொருந்திய உருவங்களை…

உலப்பு என்றால் அழிவு, ‘உலப்பிலி’  என்றால் அழியா பெருநிலையை  அடையப் பெற்ற தேவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

நக்கன்என்று ஏத்திடு நாதனை:
நக்கன் என்றால் சிவம் என்றும் ஏத்திடு என்றால் போற்றுதல் என்றும் பொருள் உண்டு.
அதாவது இதே மனித பிறவி கிடைக்க பெற்று, அதன் பெருமையை உணர்ந்து, பின் உலப்பிலி’ என்னும் அழியா பெருநிலையை அடைந்து, தேவர்களாகவே ஆகிப்போனவர்களுக்கு இம் மனித பிறப்பின் பெருமை தெரியும் என்பதால், அவர்கள் தம் வழியிலேயே இவ்வாறே ‘ஒக்க’ நிற்கும் மனித உருவங்களை காணும் போது, சிவமே என்று கைகூப்பி போற்றுவார்கள்.

நாள்தோறும் பக்க நின்றார் அறியாத பரமனை: 
இவ்வாறு சிவமாவது ஒவ்வொரு மானுட யாக்கை வடிவாகவே நாள்தோறும் அவரவர் உருவாகவே  வெளிப்பட்டுக் கொண்டிருந்தாலும், அவன் அருள்இன்றி அறிய முடியாத அச்- சிவத்தை…

புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே:
அவன் அருளால், அவன் அருகில், அவனாகவே இருந்து, அவனை நினைந்து உருகி, அவன் அருளால் போற்றி வணங்குகின்றேன்.
திருச்சிற்றம்பலம்🙏