
மூலன்உரை செய்த மூவாயிரம் தமிழ் மூலன்உரை செய்த முந்நூறு மந்திரம் மூலன்உரை செய்த முப்பது உபதேசம் மூலன்உரை செய்த மூன்றும் ஒன்றாமே.
மூலன்உரை செய்த மூவாயிரம் தமிழ்: திருமூலர் தாம் உரை செய்ததை பாடல் என்று குறிப்பிடாமல் தமிழ் என்றே குறிப்பிடுவது ஏனெனில்,
உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்று தமிழில் வகுக்கப்பட்ட இலக்கணமும், மனிதப் பிறவியின் இலக்கணமும் ஒன்றேயாம் என்பதாலேயே!
அதாவது மனிதப் பிறவியிலும் உயிரும் ஒரு எழுத்தாக, உடம்பை குறிப்பிடும் மெய் என்பதும் ஒரு எழுத்தாக, மெய்யுடன் உயிர் கலந்த பின்பு உயிர்மெய்யும் ஒரு எழுத்தாக தமிழ் இலக்கணம் போன்றே மனித பிறவியின் இலக்கணமும் அமைந்துள்ளது. அதாவது எவரொருவரும் தமிழ் மொழி மூலமாகத்தான் தன்னை அறியும் அறிவை பெற முடியும் என்பதால் திருமூலர் தாம் உரை செய்ததை பாடல் என்று குறிப்பிடாமல் தமிழ் என்றே குறிப்பிட்டு, அதன் மூலம் தமிழை அறிந்தவனே சிவத்தை அறிந்தவன் ஆவான் என்பதை மறைபொருளாக சொல்லி தம் உரையை முடித்துள்ளார்.
இவ்வாறு தமிழ் இலக்கணத்தையும் மனித பிறவியின் இலக்கணத்தையும் ஒன்றுபடுத்தி தம் முதல் பாடலில் உயிரெழுத்தின் பெருமையையும் இரண்டாவது பாடலில் மெய் எழுத்தின் பெருமையையும் மூன்றாவது பாடலில் மெய்யுடன் உயிர் கலந்த உயிர்மெய் எழுத்தின் பெருமையும் விளக்கி, இம் மூன்று உரைகளின் பொருளும் உடல் உயிர் உண்மை என்னும் ஒரே மெய்ப்பொருளையே உள்ளடக்கியுள்ளது என்றும் குறிப்பாக உணர்த்தியுள்ளார்.
இவ்வாறு ஒருவர் தமிழும், சிவமும் கலந்த திருமூலரின் முதல் மூன்று பாடல்களில் உள்ள மெய்ப்பொருளை உள்ளது உள்ளபடி உணரும்போது, அத்தகையவருக்கே…
“மூலன்உரை செய்த மூவாயிரம் தமிழும், அதில் உள்ள முந்நூறு மந்திரமும், அதில் உள்ள முப்பது உபதேசங்களின் மெய்ப்பொருளும் விளங்கும்.
திருச்சிற்றம்பலம்🙏

