
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தானைந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே
ஒன்றவன்: முதலில் ஓர் விந்தணுவாகத்தான் தகப்பன் உடம்பில் இருந்து அவன் வெளிப்படுகிறான்.
தானே இரண்டவன்: தாயின் கர்ப்பத்தை அடைந்த பிறகு, ஓர் அணுவாய் விளங்கும் தன்மை இரண்டாகவும், இரண்டை நான்காகவும் என தன்னைத்தானே பெருக்கிக் கொண்டு அதைக் காத்துக் கொள்வதின் மூலம்…
படைத்தல், காத்தல், அழித்தல், என்னும் மூன்று தகுதிகளாகவும்…
இவ்வாறு தாயின் கர்ப்பத்தில் இருளில் வாசம் செய்யும் போதே, “சிவபெருமானே! இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்றும் மாணிக்கவாசக சுவாமிகள் தம் திருவாசகத்தில் பாடி உள்ளபடி, வேதம் நான்கினும் மெய்ப்பொருளாய் விளங்குவது நாதன் நாமம் ‘நமசிவாயவே’ என்று உணர்ந்து, அதை பஞ்சபூத சம்பந்தத்தால் உருவான தம் ஐம்புலன்களின் கட்டுக்குள் கொண்டு வந்து…
அதன் காரணம் ஆசீர்வதிக்கப்பட்ட ஞானத்தால் நிரம்பப் பெற்ற ஆறாம் அறிவாக விரிந்து,
அதன் மூலம் பிறவிப் பிணிக்கு காரணமாக இருக்கும், காமம், குரோதம், துவேசம்,லோபம், மோகம்,மதம், மாத்சரியம் என்னும் ஏழு குணங்களையும் தாண்டி,
தாயின் கர்ப்பவாசத்தின் முடிவில் எண்குணத்தானாய் மிளிர்கிறான்.
திருச்சிற்றம்பலம்🙏

