
ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் பிறந்த அத்தருணத்திலிருந்து கடவுளின் ஒளியின் தோற்றத்தில் தொடர்ந்து மிதப்பவராகவோ அல்லது அவ்வொளியில் முழுவதுமாக தன்னை கரைத்துக் கொள்பவராகவோ ஆக்கிக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது.
அதாவது மாணிக்கவாசகரின் திருவாசக வாக்கின் படி, “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பிறப்பெடுத்தப் பின்னரும் மீண்டும் இறந்து, பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்புமாக” மீண்டும் மீண்டும் பிறந்து அந்த ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதிக் கடலில் அங்குமிங்குமாக தொடர்ந்து மிதந்து கொண்டிருக்கலாம்.
அல்லது “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்” என்று மாணிக்கவாசக ஸ்வாமிகள் தாம் எடுத்த இம்மனிதப் பிறவிலேயே பிறந்திளைத்து உணர்ந்தபடி, அவனின் பொன்னடிகளை கண்டு அவ்வொளியில் தன்னை முழுவதுமாக கரைத்துக் கொண்டு தொடர்ந்து மிதக்காமல் (மீண்டும் பிறக்காமல்) இருக்கலாம்.
மேலும் இங்கு மாணிக்கவாசப் பெருமான் மனிதனாகப் பிறந்தும் அவனின் பொன்னடிகளை காணப்பெறாமல் வேதம்,வேள்வி,தானம், தவம் ஆகியவற்றை செய்து அடையப்பெறும் மற்ற பேய், கணங்கள் வல்லசூரர்கள், முனிவர்கள், தேவர்கள் போன்ற மற்ற பிறப்புக்களைக் கொண்டும் கூட, பிறவிப் பெருங்கடலை தாண்ட முடியாது என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார்.
அவ்வாறு ஒருவர் தன்னை முழுவதுமாக கரைத்துக் கொள்ள, ஒவ்வொருவருக்கும் Catalyst என்னும் கிரியாயூக்கி வேண்டும். அதுவே சிவனருள் கூடிய ‘சிவாயநம’ என்னும் பஞ்சாட்சர மந்திரம்.

ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் உபதேசம்; விரும்பிய அளவு தத்துவங்களைப் பேசுங்கள், எத்தனை கடவுள்களை வணங்குங்கள், சடங்குகளைக் கடைப்பிடிக்கவும், பக்திப் பாடல்களைப் பாடவும், ஆனால் ஒருமை, முழுமையை உணராமல், நூறு யுகங்கள் கடந்தாலும் விடுதலை வராது. அது ஓம் நம சிவாய எனும் பஞ்சாட்சர மந்திரம். இதில் ஓம் – ஆன்மா, ந – பூமி, ம – நீர், சி -நெருப்பு, வா- காற்று, ய – வானம். இதன் மொத்தப் பொருள் இதுதான் உலகளாவிய உணர்வு ஒன்றே!

என்சைம்கள் குறிப்பிட்ட இரசாயன எதிர்வினைகளைச் செய்யும் உயிரியல் வினையூக்கிகள். இது ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு மாற்றும். அது போன்றே ‘சிவாயநம’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை முறையாக அறிந்து இடைவிடாது ஜபித்தால், அது சிறந்த வினையூக்கியாக மாறி, மனித உடலின் மூலக்கூறுகளை ஒளியின் மூலக்கூறுகளுக்கு நிரந்தரமாக மாற்றிவிடும்.
திருமூலரும் தம் திருமந்திரத்தில் இவ்வாறுஉணர்த்தியுள்ளார்: “உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார் கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே“ என்று, அதாவது அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மானுட தேகத்தை ஒளியின் மூலக்கூறுகளாக மாற்றி ஆக்கிக்கொள்ள இயலாத உயிர்கள், எவ்வாறு கடலில் அகப்பட்ட கட்டையானது காற்றலை அடிக்கும் திசையெல்லாம் மிதந்து போய்கொண்டே இருக்குமோ, அவ்வாறே இவ் உயிர்களும் நிலையான உருவமின்றி பற்பல பிறப்புக்களாக உருமாறி பிறந்து மிதந்து போய்கொண்டே இருக்கும்.
திருச்சிற்றம்பலம்🙏🏿

