
குவாண்டம் கோட்பாடு சொல்கிறது, ”நீங்கள் பிரபஞ்சத்தைப் போலவே பழமையானவர், ஏனென்றால் matter என்பதால் சுட்டிக் காண்பிக்கப்படும் ஆன்மாவை, உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. ஆழ்ந்த மட்டத்தில் யோசித்தால், கர்ம விதிகளுக்கேற்ப, நீங்கள் ஒரு சிறிது நேரம் மனிதனாக தன்னை அனுபவிக்கும் பிரபஞ்சமே என்று புரியும்”.
காலம், வெளி, உருவங்கள் இவைகளுக்கு அப்பாற்பட்டு, ‘நாம்’ எனும் ஒரே அளப்பரிய பேரின்ப சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம், அறியாமையால் சிறிது நேரம் மனிதனாக தன்னைத் தானே சுருக்கிக்கொண்டு, ‘நான்’ எனும் சொற்ப சக்திக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.

“மானுடர் யாக்கை வடிவு சிவலிங்கம்” என்பது திருமூலரின் திருமந்திரச்சொல். சிவலிங்கம் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது சமஸ்கிருதத்தில் “அண்ட முட்டை”. என முட்டை வடிவமாக பிரபஞ்சத்தை குறிக்கிறது, இதற்க்கு தொடக்கமும் முடிவும் இல்லை. லிங்கத்தின் ஓவல் போன்ற வடிவ அமைப்பு பிரபஞ்சத்தைக் குறிக்கிறது, ஒவ்வொரு மானுட வடிவமும் நின்ற நிலையில், லிங்கத்தின் ஓவல் போன்ற வடிவ அமைப்பை ஒத்தே இருக்கும்.
அதே போன்று கோவில்களில் சகஸ்ரலிங்கம் என்று ஒன்று இருக்கும். இதில் பிரபஞ்சம் என்னும் பிரம்மாண்ட சிவலிங்க தோற்றத்துக்குள், ஒவ்வொரு மானுட வடிவமும் சிவலிங்க வடிவமாக, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டதாக, சகஸ்ரலிங்கங்களாக, மூலப் பிரபஞ்ச லிங்கத்துக்குள்ளேயே இருக்கும்.
அதாவது ’நாம்’ எனும் ஆன்மாவாகிய சிவம், ‘நான்’ எனும் சிறிய மானுட வடிவமாக வெளிப்படும்போது, பிரம்மாண்டமான மூலப் பிரபஞ்ச லிங்கம் உணரப்படாது. மூலப் பிரபஞ்ச லிங்கம் உணரப்படும்போது, ‘நான்’ எனும் சகஸ்ர மானுட லிங்க வடிவங்கள் மறைந்து, ‘நாம்’ எனும் மூலப் பிரபஞ்ச லிங்கவடிவமாக தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
திருச்சிற்றம்பலம்🙏🏿

