திருமூலர் திருமந்திரம் உரை எண் 1989 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.”
திருமூலர் திருமந்திரம்:1989

“சந்திரன் சூரியன் தான்வரின்”
சந்திரன் என்பது இடகலையாக ஒவ்வொருவரின் நாசியில் இடது பக்கமாகவும், சூரியன் என்பது வடகலையாக ஒவ்வொருவரின் நாசியில் வலது பக்கமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சந்திரனுக்கு ஒளி சூரியனிடமிருந்து         கிட்டுகிறது. சந்திரன் மாத்ருகாரகன், அதாவது ஒவ்வொருவருக்கும் இவ்வுடம்பு கிட்டியது மாதாவின் மூலமாக, எனவே சந்திரன் என்பது அவரவர்களின் தேகமாகவே இருந்து கொண்டிருக்கிறது.

அது போன்று சந்திரனை ஒளிரவைக்கும் சூரியன் ஆத்மகாரகன். அதாவது ஒவ்வொரு உடம்புக்கும் உயிர் கிட்டியது தந்தையின் மூலமாக, எனவே சூரியன் என்பது அவரவர்களின் உயிராகவே ஆன்ம ஒளியாகவே இருந்து சந்திரன் எனும் இவ்வுடம்பை ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது.

“முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை”
சந்திரனுக்கு ஒளி கொடுக்கும் முன்பே, அதாவது இவ்வுடம்பை ஒளியூட்டும் முன்பே உள்ள பானு என்னும் சூரிய ஒளியில் அதாவது ஆன்ம ஒளியில், இந்து எனும் சந்திரன், அதாவது இவ்வுடம்பு வந்து பொருந்தும்போது (ஏய் என்றால் பொருந்துதல்)…

“அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.”
சந்திரநாடியில் இயங்கும் மூச்சு சூரிய நாடியில் பொருந்தி ஒன்றாகி, அந்த இரண்டும் வலபக்கத்திற்கும், இடப்பக்கத்திற்கும் நடுவாய் விளங்கும் நடுநாசியில் இயங்கும் போது…செய்யும் பூசனையில் சிந்தை தெளிந்து அவர் சிந்தனையற்ற சிவமயமாகவே ஆவர்!

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும்1அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ னாமே.
திருமூலர் திருமந்திரம்:584

திருச்சிற்றம்பலம்🙏🏿

Leave a comment