“அறிவை நடைமுறைக்கு மாற்றும் திறனை பெறும்வழி”

அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க தத்துவ ஞானி இவ்வாறு கூறுகிறார்,

“The Intelligence Consists not Only in The Knowledge But Also in The Skill to Apply The Knowledge into Practice.” (Aristotle)

“புத்திசாலித்தனம் என்பது அறிவில் மட்டுமல்ல, அறிவை நடைமுறையில் பயன்படுத்துவதற்கான திறனிலும் உள்ளது.”

(அரிஸ்டாட்டில்)

அறிவு என்பது எது, அது எத்தன்மையாக இருக்கிறது, அதை எவ்வாறு நடைமுறையில் திறனாக பயன்படுத்துவது என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

இருப்புள்ள தன்மைகளை உணரவைப்பது எதுவோ அதுவே அறிவாகும். இருப்புள்ள தன்மைகள் என்பது ‘நான் உடம்பாக இருக்கிறேன், மனதாக இருக்கிறேன் புத்தியாக இருக்கிறேன், பிராணங்களாக அதாவது உள்,வெளி மூச்சாக இருக்கிறேன், மற்றும் ஆனந்தமயமாக இருக்கிறேன்’ என்று ஒருவரின் ஐந்து விதமான இருப்புக்களை இடைவிடாது எது உணர்த்திக் கொண்டே  இருக்கிறதோ அதுவே அறிவாகும்.

இவ் அறிவு செயல்படாது போகும்போது, இதன் மூலம் உணரப்பட்ட ஐந்து விதமான இருப்புக்களும், அதன் வழியே உணரப்பட்ட உலகமும், பிரபஞ்சமும் இல்லை என்பதாக ஆகிவிடுகிறது. ஏனெனில் இப் பிரபஞ்சமும், இவ்வுலகமும் அதன் இருப்பை தாமே அறிவித்துக் கொள்ள இயலாது. அது போன்றே உடல், மனம், புத்தி, பிராணன், ஆனந்தம் என்னும் இவ்வைந்து விதமான இருப்புக்களும் தம்மைத் தாமே உணரவைத்து அறிவித்துக் கொள்ளுதல் என்பதும் இயலாது.

இவையனைத்தையும் ஒரு சேர அறிவிக்கும் அறிவு ஒருவருள் எப்போது நின்று போகிறதோ, அதுவே மரண அறிவிப்பாக மற்றவர்களால் அறிவிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கிறது என்பது விந்தையிலும் விந்தை! ஏனெனில் இத்தகைய மரண அறிவிப்பை அறிவிப்பவர் அறியார், தாமும் ஒரு நாள் ஏனையோரால் இத்தகைய மரண அறிவிப்புக்குள்ளாவோம் என்பதினை!!

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்சிக்கத் தானிருந் தானே”

என்பது திருமூலரின் திருமந்திரம்.

அதாவது உடல், மனம், புத்தி, பிராணன், ஆனந்தம், என்னும் ஐந்து விதமான இருப்புக்களாக இருக்கும் ‘தன்னை அறிவிக்கும் அறிவை குருவருளால் அறிந்து’  அதற்கு மேலும் “அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில் பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்” ? என்னும் பத்திரகிரியார் சித்தரின் புலம்பலின் படி,

‘தன்னை அறிவிக்கும் அறிவை, குருவின் அறிவின் அருளால் அறிந்து அஃதினில் பிறிவுபட நில்லாமல் பிடிப்பதே, கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் சொல்லியுள்ளது போன்று ‘அறிவை நடைமுறையில் பயன்படுத்துவதற்கான திறனாகும்’

பிறிவுபட நில்லாமல் திறனாக பிடிக்கப்படும் அத்தகைய அறிவினில் உடல், மனம், புத்தி, பிராணன், ஆனந்தம், எனும் ஐந்து விதமான இருப்புக்களும் கடலில் உப்பு பதுமை அதாவது உப்பு பொம்மை கலப்பது போல் கலந்துவிடும். அதன்பின் தூய அருளறிவு ஒன்றே அருட்பெருஞ்ஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

இத்தகைய பெரும்பேற்றை அடைந்த வள்ளல் பெருமான் “அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே”  என்று தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் இவ்வாறு பாடியுள்ளார்.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment