
‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ – திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகம்:
‘நீறு பூத்த நெருப்பு’ என்று ஒரு தமிழ் சொல் உண்டு. அணையாத, கண்ணுக்குத் தெரியாத நெருப்பின் மீது இலேசாக சாம்பல் (நீறு) படியும் (பூக்கும்)…இதையே ‘நீறு பூத்த நெருப்பு’ என்பார்கள். அது போன்று ஒவ்வொருவரின் உயிர்வித்தாக, அணையா விளக்காக, அவரவர்களின் புறக்கண்களுக்கு புலப்படாத தன்மையில், அதாவது ‘நீறு’ பூத்த நெருப்பாக, அவரவர்களின் தேகத்தின் மையப்பகுதியில் சிவம் ஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
‘குருவே சிவமெனக் கூறினன் நந்தி’…என்னும் திருமூலரின் திருமந்திரச் சொல்படி, ஒருவருக்கு சிவனருள், குருவருளாக கூடின் அத்தகையவருக்கு,
மந்திரமாவது நீறு-இந்-நீறு- ‘சிவாய-நம’ என்னும் பஞ்சாட்சர மந்திரமாக வெளிப்பட்டு அது அவர்களின் மனதில் திறனாக, வானவர் மேலது நீறு-அருளாளர்கள் என்று சொல்லப்படுகின்ற வானவர் மேனி முழுவதும் உள்ளதாக, தந்திரமாவது நீறு- மனதில் உருவான மந்திரத் திறன், தந்திரமாக, அதாவது அவர்களது உருவம் தன்னில் திறனாக, வேதத்தி லுள்ளது நீறு-அதுவே வேதம் நான்கினும் மெய்ப்பொருளாக,
போதந் தருவது நீறு- அதுவே சிவபோத மெய்ஞானத்தை தருவதாக, புன்மை தவிர்ப்பது நீறு- அத்தகைய சிவபோத மெய்ஞானத்தால் ‘மீண்டும் பிறத்தல்’ என்னும் இழிவு ஏற்படாத வண்ணம் தவிர்த்துவிடுவதாக, ஓதத் தகுவது நீறு- வாசியால் ‘சிவாய-நம’ என உள்ளும், புறமும் ஒத்து, ஓதத் தகுவதாக, வுண்மையி லுள்ளது நீறு- அதனால் உள்ளிருக்கும் உண்மையில் உண்மையுள்ளதாக,
பரவ இனியது நீறு- அவ்வாறு சத்தியத்தில் ஓதுவதால் ‘நீறு’ உடல் முழுவதும் பரவி இனியதாக, காண இனியது நீறு- அவ்வாறு பரவியுள்ளதை மதி படைத்த அகக்கண்களால் காணும் போது இனியதாக, பேச இனியது நீறு- இடைவிடாது ‘சிவாயநம’ என வாசியால் பேசப்பேச அச்சொல்லே இனியதாக, அருத்தம தாவது நீறு- அதன் காரணம் பொய்யுடம்பு பொன்னார் மேனியாக,
பொருத்தம தாவது நீறு – அதாவது ‘மெய்யுடன் உயிர்’ பொருந்தி உயிர்மெய் எழுத்தாக, பயிலப் படுவது நீறு- அதன் மூலம் பிறவாமை என்னும் அரும்பெரும் பேற்றை பெற்று தேர்ச்சியடைவதாக, பாக்கிய மாவது நீறு- அதுவே அரும்பெரும் பாக்கிய மாவதாக, துயிலைத் தடுப்பது நீறு- ‘உறங்குவது போலும் சாக்காடு’ என்னும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கேற்ப, இறப்பு என்னும் துயிலைத் தடுத்து மரணமில்லாப் பெருவாழ்வை கொடுப்பதாக உள்ளதை…
‘ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய’
“சிவனருள் கூறில் அச்சிவலோக மாமே” என்னும் திருமூலர் திருமந்திரப்படி, ‘சிவாயநம’ எனும் மந்திரத் தன்மையாகவே இருக்கும் இந்- ‘திருநீறு பதிகப்பாடல்கள் பத்தையும் (கூறில்) ஓதவல்லவர்’ சிவனருளால் சிவஜோதியுள் கலந்து அச்சிவலோக மாகலாம்!
திருச்சிற்றம்பலம்🙏🏿

