“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் “

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் “

ஒருவரின் உடலின் சுமை உணரப்படுவது அவ்வுடலுடன் தொடர்புடைய பொருட்களினால். அதாவது பூமியில் உள்ள புவியீர்ப்பு சக்தியினால் ஒருவரின் உடலின் எடை உணரப்படுகிறது. விண்வெளியில் இத்தொடர்பு இல்லாததினால் உருவத்தில் மாற்றம் இல்லாவிடினும், உடல்எடை உணரப்படுவதில்லை.

அதுபோன்றே ஒருவர் தம் உடல் அசதி காரணாமாக ஆழ்ந்த உறக்கநிலைக்கு சென்றால், அந்நிலையிலும் உடலின் எடை உணரப்படுவதில்லை. அந்நிலை என்பது எந்தவொரு தொடர்பும் இல்லாத ஏதுமற்ற நிலை.

“என்னிடம் வாருங்கள், நீங்கள் அனைவரும் அதிக சுமையுடன் இருக்கிறீர்கள், நான் உங்களுக்கு ஓய்வு தருகிறேன்”. என்று – பைபிளில் மத்தேயு 11:28 சொல்லப்பட்டுள்ளது. இதில் சுமை என்று சொல்லப்பட்டுள்ளது ‘உடல்சுமை’ மற்றும் ‘மனச்சுமை’ இரண்டையும் சுமக்க முடியாமல் சோர்ந்து இருப்பவர்களை பற்றியது. அவ்வாறே இறைவனருகில் சென்றால் சுமை உணரப்படுவதில்லை.

ஆக ‘உடல்சுமை மற்றும் மனச்சுமை’  இவ்விரண்டையும் உணர இயலாத ஆழ்ந்த உறக்கநிலையும், இறைவனருகில் செல்லும் நிலையும் ஒன்றேயென கருதினால், ஆழ்ந்த உறக்கநிலையில் உள்ள அத்தன்மையே இறைவனின் தன்மை என்பதாகவும் ஆகிறது. அவ்வாறாயின் உருவம் மற்றும் பாலினம் ஏதுமில்லாத, கால, வெளி அற்ற, இருக்கு, இல்லை என்னும் தன்மைகள் அற்ற அந்நிலையே “இறைவனின் இருப்பிடம்” என்றும் கொள்ளலாம்.

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் “. என்னும் பாசுரப்படி,  இறைவனின் இத்தகைய இருப்பிடத்தையே வைகுந்தமாக, திருவேங்கடமாக தம் விழிப்பு நிலையிலும் கண்டுணர்ந்து, தம் உடல் பாரம் முழுவதும் நீங்கப்பெற்ற நிலையில், உருவத்தோடு வைகுந்தம் சேர்ந்த, பன்னிரு ஆழ்வார்களில் முதன்மை ஆழ்வாரான நம்மாழ்வார் அவர்கள் அருளிய திருவாய்மொழி பாசுரம்:

ஆணல்லன் பெண்ணல்லன்* அல்லா அலியுமல்லன்,*

காணலுமாகான்* உளனல்லன் இல்லையல்லன்,*

பேணுங்கால்பேணும்* உருவாகும் அல்லனுமாம்,*

கோணை பெரிதுடைத்து* எம்பெம்மானைக்கூறுதலே. 2.5.10

எம்பெருமான் ஆனவன், ஆணும் பெண்ணும் அல்லன். இரண்டு பாலிலும் சேராத அலியும் அல்லன். கண்களால் காண முடியாதவன். உண்டு/இல்லை என்று ஊர்ஜிதப்படுத்த இயலாதவன். ஆனால், அடியார்களுக்கு வேண்டுகின்ற காலத்திலே, வேண்டுகின்ற வடிவில், காட்சி தந்து ரட்சிப்பவன். ஆதலால், அப்பரந்தாமன் குறித்து எடுத்துரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்!

அத்வைதாச்சாரியார் மகான் வித்யாரண்யர் சொல்வது: மறுப்பதன் மூலம் உலகமும் ஜீவனும் புலன்களால் உணரப்படுவதை நிறுத்துவதாக அர்த்தமல்ல, அது அவர்களின் மாயையான தன்மையின் நம்பிக்கையை குறிக்கிறது. இல்லையேல் ஆழ்ந்த உறக்கத்திலோ அல்லது மயக்கத்திலோ மக்கள் தானாக விடுவிக்கப்படுவார்கள்.மாறாக நிற்குண பிரம்மத்தின் தன்மையை உணர்வதின் மூலம் உலகமும் ஜீவனும்  ஒடுங்கிப்போகும்.

Leave a comment