
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
“அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே”.
அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்:
கையில் உள்ள ஐந்து விரல்கள் ‘நமசிவாய’ என்ற பஞ்சாஷரத்தை குறிக்கும். இதில் ‘ஆதி’ என்பது ஆரம்பம் என்றும், ‘அந்தம்’ என்பது முடிவு என்றும் பொருள் கொண்டால், ‘ஆதி’ சிறுவிரலில் ‘ந’ என்னும் அஷ்ரம் தொடங்கி, மோதிரவிரலில் ‘ம’ என்னும் அஷ்ரமும், ‘அந்தம்’ என்னும் நடுவிரலில் ‘சி’ என்னும் அஷ்ரமும், ஆள்காட்டி விரலில் ‘வா’ என்னும் அஷ்ரமும், கட்டை விரலில் ‘ய’ என்னும் அஷ்ரமுமாக, ‘நமசிவாய’ என முடிவடையும்.
அதாவது ‘நம’ என ‘ஆதி சிறுவிரல்’ மற்றும் மோதிர விரல் மூலமாக தொடங்கி, ‘சிவாய’ என்று ‘அந்தம் நடுவிரல்’, ஆள்காட்டி விரல், மற்றும் கட்டை விரல் வழியாக நாவின் வழியே நமசிவாய என்று வெளியே குரலாக உச்சரிக்கப் பட்டு முடிவடைகிறது.
குரல் எவ்வாறு உருவாகிறது என்று விஞ்ஞானம் சொல்கிறது. நுரையீரலில் இருந்து காற்றோட்டத்தால் குரல் உருவாகிறது. நுரையீரலில் இருந்து காற்று அதிக வேகத்தில் குரல் மடிப்புகளின் வழியாக வீசும்போது, குரல் மடிப்பு அதிர்வுறும். அதிர்வுகள் குரல் என்று சொல்லாக, வாய் வழியாக ‘நமசிவாய’ என்று வெளியில் ஒலிக்கும்.
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்:
அதாவது காற்றின் வழியாக குரலாக வெளிப்பட்ட நமசிவாய என்னும் மந்திரத்தை, வார்த்தையை பயன்படுத்தாத சிவாய நம என்னும் குரலின் வழியாக சுவாசக் காற்றாக, பஞ்சாட்சரமாக மாற்றுவதே வந்த வழிமுறை மாற்றி உரை செய்யும் என்பதாக பொருள் கொள்ளலாம்.
மேலும் ஒருவர் எவ்வளவு அளவற்ற புண்ணிய காரியங்களை செய்தாலும் மீண்டும் மறுபிறப்பு என்பது அவர்களுக்கு உண்டு, எவர்கள் “சப்தம் இல்லாமல் சிவம்” என்று இடைவிடாது சொல்கிறார்களோ அவர்களே மறுபிறப்பில்லாத சிவலோகப் பதவியை அடைவார்கள் என்று கருட புராணத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. அது போன்று“சொற்களைப் பயன்படுத்தாத ஒரு குரல் உள்ளது. கேள்.” என்று சூபி ஞானி ஹஜ்ரத் ரூமி என்பவர் சொல்லியுள்ளார்.
இவ்வாறு நாவின் வழியே வெளி வந்த வழிமுறையை ‘அந்தம்’ முதல் ‘ஆதி’ முடிவு என மாற்றி, ‘நமசிவாய’ என்று நாவினால் வெளியில் உரை செய்ததை ‘சிவாயநம’ என வாசியால் (மூச்சால்) உள்ளே இடைவிடாது உரை செய்து…
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்:
“நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவம் என்னும் நாமத்தைச் சிந்தை உள் ஏற்றப்
பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ”.
என்று திருமூலர் தம் மற்றொரு திருமந்திரம் 2717 ல் உரைத்தபடி, நம என்னும் சப்தத்தை நாவின் வழியே வெளி மூச்சாக உச்சரித்து, சிவாய என்னும் சப்தத்தை சிந்தையுள் உள்மூச்சாக இடைவிடாது ஜபிக்கும் போது,
பவமது தீரும்: என்பது இரு வகையான கர்ம பலன் ஜென்ம பலன் என்னும் இரண்டு பாவங்களும் தீர்ந்து, பரிசுத்தமாக,
அவமதி தீரும்: அறியாமை என்னும் இருள் விலகி மீண்டும் பிறப்பில்லாத பெருவாழ்வை அடையலாம்.
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்:
அதாவது கலப்பற்ற தூய தமிழ் போன்று ‘ஆதிசிவம்’ இதுவே என தெளிந்து வழிபடும்படி,
நந்தி இதனை நவம்உரைத் தானே:
நந்தி (குரு) இதனை நவம் (புதுமை என) உரைத் தானே! இவ்வாறு ‘சிவாய நம’ என்று வாசியால் மாற்றி இடைவிடாது உச்சரிக்கும் போது, அவ்வாறு மாற்றி உரை செய்யும்போது சிவாய நம என்னும் பஞ்சாட்சர மந்திரமாக கைகளில் ஒளிர, அதுவே சிவாய நம என்னும் மந்திர ஓசையாக நாசியின் வழியே இயங்கும் ஒவ்வொரு மூச்சிலும் ஒலிக்க, அதன் மூலம் கைகளின் ஆற்றலும், நாசியில் இயங்கும் மூச்சின் ஆற்றலும் அதாவது ஒளியும் ஒலியும் ஒன்றாக, அது விநாயகப் பெருமானின் தும்பிக்கையின் சக்திக்கு ஒப்பாக, எவ்வாறெனில் விநாயகர் பெருமானின் தும்பிக்கை, கைகளின் ஆற்றலாகவும் நாசியின் ஆற்றலாகவும், அதாவது ஒளியும் ஒலியும் ஒருசேர இயங்கி அருளாக வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை போல்,
“ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி” என்று வள்ளல் பெருமான் தம் அகவலில் பாடியது போன்று ஓங்கி நிற்கும்.
அதன் காரணம் அத்தகையோர் ‘மானுட ராக்கை வடிவே சிவலிங்கமாக’ கைகள் சிவாய நம என்னும் ஐந்தெழுத்தை உள்ளடக்கிய பஞ்சாட்சரமாகவே ஆகிவிடுகிறது. இவ்வாறு தம் கைகளில் ஐந்தெழுத்தை கண்டுணர்ந்தவர்கள் காலையில் துயில் எழுந்தவுடன் முதலில் தம்முடைய கைகளையே சிவாய நம என்னும் ஐந்தெழுத்தை மந்திரமாக பார்த்து கண்களில் ஒற்றிக்கொள்வார்கள். அதுபோன்றே அதுவரை மஞ்சள் அரிசியாக வெளியில் இருந்ததும், இத்தகையோரின் பஞ்சாட்சர கைக்குள் வந்த பின்னர், வந்த பின்னர்தான் அதுவும் ஆசிர்வாதம் செய்யப்படும் ‘பஞ்சாட்சர அட்சதையாக’ ஆகிவிடுகிறது!
திருச்சிற்றம்பலம் 🙏

