
“எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணமுண்ட வாறே”.
திருமூலர் திருமந்திரம்:2885
“எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை”
ஒருவர் புத்தகத்தில் உள்ள எழுதப்பட்ட எழுத்துக்களை தம் கண்களால் பார்த்து படித்து, அவ்-ஏட்டின் பொருளை அறிந்து கொள்ளலாம். ஆனால் எவ்வகையில் ஒருவர் எழுத்துக்களே இல்லாத புத்தகத்தின் ஏட்டின் பொருளை அறிய இயலும்?
இப்பிரபஞ்சம் எந்த ஒரு மொழியையும் பயன்படுத்தாத எழுதாத புத்தகமாக, ‘வான் பற்றி நின்ற மறையாக’ அழிவற்ற ஒலி அலைகள் மூலம், வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மனித குலத்திற்கும் மெய்ப்பொருள் ரகசியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த ஒலி அலைகளை முறையாக தன்னுள் கிரகித்து, அஃதினை சொல்லாக்கி, அதன் பொருளை…
“தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத”
‘தெருள்’ என்பதற்கு அறிவின் தெளிவு என்று பொருள் உள்ளது. ‘தெருளாத கன்னி’ என்பது ஒவ்வொருவருள்ளும் உறைந்திருக்கும் வெளிப்படாத அறிவொளியே ஆகும். ‘தெறி’ என்பதற்கு தாக்கப்பட்டு வெளிப்படுதல் என்று பொருள் உள்ளது.
அதாவது ஒவ்வொருவருள்ளும் உறைந்திருக்கும் கன்னித்தன்மை நிரம்பிய, ஆனால் வெளிப்படாத இவ்-அறிவொளி, எழுதாத புத்தகமாக இருந்து கொண்டிருக்கும் இப்பிரபஞ்ச ஏட்டின் ஒலி அலைகளை தம்முள் முறையாக கிரகித்து அதன் பொருளை உணர்ந்து ஓதும்போது…
“மலராத பூவின் மணத்தின் மதுவை”
ஒவ்வொருவர் மூலாதாரத்திலும் அதுவரையில் மலராத பூவாய் மறைந்திருந்த ‘ஒளிக்கும் பராசக்தியான’ பெண்மையின் கன்னித்தன்மை தாக்கப்பட்டு, அதனால் வெளிப்பட்ட மலர்ந்த அப் பூவின் மணத்தை…
“பிறவாத வண்டு மணமுண்ட வாறே”
ஒவ்வொரு மானுட யாக்கையிலும் குடிகொண்டிருக்கும் (வெளிப்படாத) ஆறறிவோடு விளங்கிக் கொண்டிருக்கும், ஆதியும் அந்தமும் இல்லாத பிறவாத ஆன்மா என்னும் உயிர், வண்டாக அப் பூவின் மணத்தின் மதுவை உண்டு, மயங்கி, அம்மானுட யாக்கையை விட்டு விலகி எங்கும் வெளிச் செல்லாமல், அவ்வுடம்பிலேயே ரீங்காரம் இட்டபடி இனிதே அமர்ந்திருக்கும்?
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
திருச்சிற்றம்பலம் 🙏

