
“சனாதன தர்மம்” சித்தர்களின் கோட்பாடு.
“சனாதனா” என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், இது நிரந்தரமானது, என்றென்றும் உள்ளது, மற்றும் நித்தியமானது என்று பொருள்கள் உள்ளன.
எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை அறிவதே அறியும் கலை. :ரூமி
புறக்கணிக்கக் கற்றுக்கொள்வதற்கு முன், ஒப்பிட்டுப் பார்க்க எவருக்கும் இரண்டு விதமான அனுபவங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அவர்களது அறிவில் இருந்து வெளிப்படும் வெளி அனுபவ விஷயங்கள். இது மாறுபாடு உடையது , நிரந்தரம் இல்லாதது, இதன் மூலம் அற்ப சந்தோஷமே கிட்டும்.
மற்றொன்று அவ்-அறிவுக்கு ஆதாரமாய் விளங்கும் தூய அறிவைப் பற்றிய மெய்ஞானம். இது மாறுபாடு இல்லாதது, நித்தியமான ஆனந்த அனுபவத்தை அளிப்பது.
“அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்” ?
என்பது சித்தர் பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்.
அதாவது பத்திரகிரியார் போன்று மெய்ஞான பற்று கொண்டவர்கள் தங்கள் அறிவுக்கு ஆதாரமாய் விளங்கும் “சனாதனம் என்னும் நிரந்தரமான, என்றென்றும் உள்ள நித்தியமான தூய அறிவைப் பற்றி, அதன் மூலம் நித்தியமான ஆனந்த அனுபவ வடிவத்தை அடைய, தங்களது அறிவில் இருந்து வெளிப்படும் வெளிவியாபார விஷய அனுபவங்களை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கக் கற்றுக் கொள்வார்கள். அவ்வாறு புறக்கணிக்கக் கற்றுக்கொள்ளும் வழிமுறைகளை கொண்டதே “சனாதன தர்மம்” ஆகும்.
ஆனால் மெய்ஞான பற்று இல்லாதவர்கள் அதாவது “சனாதன தர்மம்” கூறும் வழிமுறைகளை புறந்தள்ளியவர்கள், தங்களது அறிவில் இருந்து வெளிப்படும், அல்ப சந்தோஷத்தையே கொடுக்கும் வெளி விஷய அனுபவங்களை மட்டுமே பற்றிக் கொள்வதால், அவர்களது அறிவுக்கு ஆதாரமாய் விளங்கும் தூய அறிவால் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப் படுவார்கள்.
அதாவது ஒருவர் தூய அறிவால் தாம் புறக்கணிக்கப்படு முன்னரே, அத்-தூய அறிவை “சனாதன தர்மம்” மூலம் உணர்ந்து அடைய ஏனையவற்றை முழுமையாக புறக்கணித்தால், அத்தகையவரே புறக்கணித்தலின் கலையை முழுமையாக அறிந்து கொண்டவர் ஆவார்.
“சனாதன தர்மம்” இத்தகைய ரீதியில் மனித குலத்தால் கடைப்பிடிக்கப்பட்டால்? எல்லா வேறுபாடுகளும் மறைந்து போய், மனிதகுல அறிவு முழுவதற்கும் ஆதாரமாய் விளங்கும் தூய அறிவானது அருட்பெருஞ் ஜோதியாக இவ்வுலகம் முழுவதும் ஒளிரக் காணலாம்.
“பிரிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என் அறிவுக் கறிவாம் அருட்பெருஞ் ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்:
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

