You Are That! – “Seed beyond effects”

 திருமூலரின் திருமந்திரம்: 105

“ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்

பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது

ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்

தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே”. 


வினைகளால் உருவானதே ஒவ்வொரு மனித பிறவிகளும். அவ்வினைகள் இருவகையானது. முதல் வகை வினை என்பது, ஒரு கருவை உண்டாக்க இணையும் ஆண்,பெண் இவ்விரண்டு பேரின் இருவினைகளும், ஓர் வினையாய் கலந்து அக்கருவில் அடங்கும். இரண்டாவது வகை வினை என்பது, அக்கருவானது உண்டாகும் தருணத்தில், முன்ஜென்ம வினையானது காற்று உருவில் வந்து அக்- கருவோடு இரண்டறக் கலக்கும். இவ்- இருவினைகளின் சேர்க்கையே  மனித வடிவமாக உருவெடுக்கின்றது. 

ஈசன் என்னும் சிவம் இருப்பது இருவினைகளுக்கு உட்பட்டது அன்று! இரு வினைகளையும் கடந்து அப்புறம் இருக்கும் ‘பீசம்’ என்னும் மூலாதாரத்தில்! (பீசம் என்பதற்கு விதை; மூலம்; அண்டவிதை; சுக்கிலம்; என்று பொருள்கள் உள்ளன.) அதுவே உலகம் அனைத்திற்கும் பெரும் தெய்வமாக, ஒரே தெய்வமாக அருட்பெருஞ்ஜோதி வடிவில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. 


“மரத்தை மறைத்தது மாமத யானை 

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் 

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே”.

என்பது திருமூலரின் திருமந்திரம்.

அதாவது ஈசனை மறைக்கும் பார்முதல் பூதங்களை நீக்கி  ‘பீசம்’ என்னும் ஒளிரும் ஈசனை பார்க்காமல்,  ஈசனை அதுவாகவும், இதுவாகவும் நினைத்துக் கொண்டு பார்க்க முற்படுபவர்கள், தூசு படிந்த நிலை கண்ணாடி முன்பாக நின்று தம்மை தாமே பார்க்க முயல்பவர்களுக்கு ஒப்பாகும்! 

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment