“ஒரே மொழி பேசுபவர்கள் அல்ல, ஒரே உணர்வைப் பகிர்ந்து கொள்பவர்களே ஒருவருக்கொருவர் புரிந்துகொள்கிறார்கள்” என்பது சூபி ஞானி ரூமியின் கூற்று!
மானுட யாக்கை என்பது ‘உயிர் உடம்பு’ என்னும் இவ்விரண்டின் கூட்டுறவால் உருவாகுவது. இஃதில் உடம்பின் உணர்வுகள் எண்ணற்ற வாய்மொழிகள் வழியே சப்தத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அது போன்றே இவ் உடம்பினில் குடி கொண்டிருக்கும் உயிருக்கும் உணர்வு உண்டு, மொழியும் உண்டு. அஃது ஒரே உணர்வாக ஒரே மொழியாக சப்தமே இல்லாமல் இடைவிடாது சதா ஒளிர்ந்து கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதி வடிவாகும்.
ஒரே வாய்மொழி மூலமோ அல்லது பல்வேறு வாய்மொழிகள் மூலமோ மனிதர்கள் தங்களுக்குள் உண்மையான உணர்வை பகிர்ந்து கொள்வது என்பது இயலவே இயலாது.
மாறாக, வாய்மொழி பேசுபவர்கள் தங்களது உடம்பின் உணர்வை, மாறாத ஒரே உணர்வாய் உடம்பினுள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அருட்பெரும்ஜோதியுடன் மௌன மொழியாக பகிர்ந்து கொண்டால்…
ஒருவருக்கொருவர், அதாவது உடம்பினால் உயிரும் உயிரினால் உடம்பும் ஒன்றையொன்று புரிந்து கொண்டதாய் ஆகி, ஒர் உருவாய் மாறிவிடும்.
பகவான் ரமண மகரிஷியின் உபதேசம்
“மௌனமே உண்மை. மௌனம் ஆனந்தம்.
மௌனமே அமைதி. எனவே மௌனமே ஆன்மா.”
வள்ளல் பெருமானின் அருட்பெரும்ஜோதி அகவல்:1570
“அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்
ஓர்உரு ஆக்கியான் உன்னியபடி எலாம்”
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


