You Are That! – “Source finder”

“வித்தினைத் தேடி முளையைக் கைவிட்டவர்
பித்து ஏறினார்கள் என்று உந்தீபற
பெறுவது அங்கு என் பெணே உந்தீபற”.
திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார்: பாடல் 28.

விளக்கம்:
‘வித்து’ என்பது தோற்றத்திற்கு காரணமாக இருப்பது. எனினும் அவ் வித்தின் சக்தி, எவ்வாறு ஒரு மரத்தின் விதைகள் மண்ணுக்கு கீழே மறைந்தே இருக்குமோ, அவ்வாறே ஒவ்வொரு மானுடப் பிறப்பின் தோற்றத்திற்கு காரணமான ஆதி மூலமான வித்து சக்தி ‘காட்சிக்கு’ அப்பாற்பட்டதாகவே விளங்கிக் கொண்டு இருக்கின்றது. ‘முளை’ என்பது அவ் வித்திலிருந்து வெளிப்படும் தோற்றம். அதாவது காணக்கூடிய வஸ்துவாக வெளிப்படுவது.

வித்தினைத் தேடி முளையைக் கைவிட்டவர் :-
ஒவ்வொரு மானுட தேகமும் அன்னமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம் என்னும் பஞ்ச கோச முளைகளாகி… ஆதிமூலமாக அதனுள்ளேயே ஒளிர்ந்து கொண்டிருக்கும் முளைகளுக்கு காரணமான வித்தானது வெளிப்படாதவாறு மறைத்துக் கொண்டிருக்கிறது… அவ்-வித்தினை தேடி அடைய முயல்பவர்கள் முதலில் முளையைக் கைவிட்டு…
அதாவது ‘நான்’ என்பது புறக்கண்களுக்கு புலப்படுகின்ற ‘தனது உருவம்’ அன்று! என்னும் மிக உயர்வான ஞான அனுபவத்தின் மூலம், முளைகளை கைவிட்டால்? அதன் மூலம் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆதி மூலமான வித்து தாமே வெளிப்பட்டு அத்தகைய வரை ஆட்கொள்ளும்!

பெறுவது அங்கு என் பெணே:-
“சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி” என்று வள்ளல் பெருமான் தம் அகவலில் பாடியுள்ள படி, இத்தகைய (சுட்டுதற்கரிய) கிடைத்தற்கரிய பெறும் பேற்றினை அங்கு (வித்தில்) பெற்றவர்கள்!!

பித்து ஏறினார்கள்:-
”சித்தம் போக்கு சிவன் போக்கு” என்றே இருப்பதால் உலகத்தவர்களால் பித்தன் என்றே அழைக்கப்படுவார்கள் என் பெண்ணே!!!

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment