“எட்டுக் கொண்டார்தமைத் தொட்டுக் கொண்டே நின்றார்
விட்டார் உலகம் என்று உந்தீபற
வீடே வீடாகும் என்று உந்தீபற”.
திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 24.
விளக்கம்:
பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, மற்றும் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டின் தன்மை கொண்ட ஒவ்வொரு மானிட தேகமும் சிவபெருமானின் திருமேனியாகவே விளங்கிக் கொண்டிருக்கின்றது. இஃதினில் (இத்தேகத்தில்) இயங்கிக் கொண்டிருக்கும் பிராண, அபான வாயுக்களில் யோகக்ஷேமமாகவும், அதாவது திருவாசியாகவும் சிவபெருமானே இருந்து கொண்டு, தன்னைத் தாமே தொட்டுக் கொண்டும் இருக்கின்றார், எனினும்?
“தன்னைத்தான் பார்த்தாரில்லை,
தன்னோடு தான் பேசினாரில்லை,
தன்னைத்தான் தொட்டாருமில்லை”.
என்பது ஒரு சூஃபி ஞானியின் கூற்று.
தன்னைத்தான் பார்த்தாரில்லை:-
அதாவது மேற்கூறிய எட்டுவித தன்மையுடன் ‘சிவாம்சம்’ பொருந்தியதாகவே ஒளிர்ந்து கொண்டிருக்கும் தம்-தேகத்தை, அவ்வாறே பார்த்து அறிந்தார் என யாரும் இல்லை!
தன்னோடு தான் பேசினாரில்லை:-
அவ்வாறு ஒளிர்ந்து கொண்டிருக்கும் இத்- தேகத்துனுள் இயங்கிக் கொண்டிருக்கும் பிராண, அபான வாயுக்களை திருத்தி, ‘நம:சிவாய’ எனும் திருவாசகச் சபதமாக்கி, தன்னோடு தான் பேசிக் கொண்டிருப்பவர் என்றும் எவரும் இல்லை!!
தன்னைத்தான் தொட்டாருமில்லை:-
இவ்வாறு திருவாசியான சிவ:சப்தத்தையும், சிவாம்சம் பொருந்திய எட்டுக் கொண்டாரையும், அறிந்திராத உயிரும், மெய்யும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமல் அதாவது தன்னைத்தானே தொட்டுக்கொள்ளும் உபாயத்தை அறிந்திராமல்…
“பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”
என திருமூலர் தன் திருமந்திரத்தில் பாடியபடி, பெறுதற் கரியதோர் பேற்றினை பெற்றும் அதை இழந்து கொண்டு இருக்கின்றது!!!
அஃதின்றி ‘எட்டுக் கொண்டார்தமைத் தொட்டுக் கொண்டே நின்றார்’ எலாம் அதுவரையில் தொட்டுக் கொண்டிருந்த உலகப் பற்றுக்கள் யாவையும் விட்டொழித்து…
உள்ளத்தை பெறும் கோயிலாகவும், ஊனுடம்பை ஆலயமாகவும் ஆக்கி, உயிர் குடிகொண்டுள்ள தம் வீட்டை மெய் வீடாக்கி அஃதினில் இன்புற்று இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

.jpeg)
