திருமூலர் திருமந்திரம் உரை எண் 2008 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

“அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே”.

அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணுவை நெருங்க கூடியவர்களுக்கே பரம்பொருளை அடைதலும் கைகூடும்.

நுண்ணியதாக உள்ள பரமாணு, உயிர் வித்தாக, அதாவது சிவமாகவே ஒவ்வொரு தேகத்துக்குள் இருந்து கொண்டும், அதுவே தன்னை தானே பலவாக பெருக்கிக் கொண்டு, உடம்பெனும் சக்தி வடிவாகவும் தன்னை ஆக்கிக் கொண்டுமுள்ளது. வாஸ்தவத்தில் இவை அனைத்தும் சிவசக்தியாகிய உயிர்த் திரள்களே.

பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச் சிவமே” என்று வள்ளல் பெருமான் தம்
அருட்பெருஞ்ஜோதி அகவலில் சொல்லி உள்ளதில் உள்ள பயிர்ப்பு: என்னும் பதத்திற்கு தூய்மையின்மை என்றும், கரணம்: என்னும் பதத்திற்கு உடம்பு என்றும் பொருள் உள்ளது.

அதாவது ஆண், பெண் உறவு மூலம் மெய் என்னும் உடம்பு, உயிர் (சக்தி, சிவம்) என்னும் பாகுபாடுகளாக, தூய்மையில்லாத விதவிதமான முகங்களுடன் காணப்படும் மானுட வடிவங்கள் யாவுமே ஒன்றெயென விளங்கும் சிவசக்தியாகிய உயிர்த்திரள்கள் தான்.

தூய்மையின்மையாக உருவாகுவது, உடல், உயிர் அதாவது சக்தி எனும் தேகம் வேறு உயிரெனும் சிவம் வேறு , என்று தனித்தனியாக உணரும் வேறுபாடுகளால்தான். இவ் வேறுபாடுகள் மறைந்து ‘உயிர்த்திரள் ஒன்றென’ உணரும் மெய்ஞானம், குரு அருளால் ஒருவருக்கு கிட்டிடின் மெய்யனும் இவ் உடம்பும் அதாவது சக்தியும், சிவமயமாகவே ஆகிவிடும்.

‘உயிர்த்திரள் ஒன்றென’ எல்லாம் சிவமயமாகவே உணரும் இவ்வுணர்வு மூலமாகத்தான், அதாவது அணுமயமாகவே ஆகித்தான், அணுவில் அணுவாய் விளங்கும் ஆதிபிரானை அனுக முடியும்.
திருச்சிற்றம்பலம் 🙏