“இருள் இடத்து சிக்கெனப் பிடித்தேன்”

திருவாசகம் “பிடித்த பத்து”-4

மாணிக்கவாசகர் பிடித்த பத்து என்னும் அதிகாரத்தில் நான்காவது பாடலாக,
“சிவபெருமானே! இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்பதாக பாடி உள்ளார்.

இருள்: என்பதற்கு ‘பிறப்பு’ என்று ஒரு பொருள் உள்ளது ‘பிறப்பு’ என்பது தாயின் கருவறையில் இருக்கும்போதே தொடங்கி விடுகின்றது. அவ்வாறு கருவறையில்
“ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்” என்று மாணிக்க வாசகர் தம் போற்றி திருஅகவலில் குறிப்பிட்டுள்ள படி , கருவறையில் இருக்கும் நான்காவது மாதம் பேர் ‘இருள்’ சூழ்ந்த இடமே.

மணிவாசகப் பெருமான் அவ்வாறு தாம் இருள் சூழ்ந்த தாயின் கருவறையில் நான்காவது மாதத்தில் இருக்கும்போதே “சிவபெருமானே! அந்நிலையிலேயே உன்னை உணர்ந்து சிக்கெனப் பிடித்ததால் பிழைத்து வெளிவந்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்பதாக அவர் சொல்லிய பாட்டின் பொருள் இது எனக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே, மாணிக்கவாசக பெருமான் போன்றே, அவரவர்களது கர்ப்பவாசத்தின் நான்காவது மாதத்தில் வெளிப்பட்ட பேர் இருளிலிருந்து, அவன் அருளால் பிழைத்து உருவாகி வந்தவர்கள் தான், என்பதை உணர்ந்து கொண்டே இருந்தால் நாமும் அவரில் ஒன்றாகலாம்!