“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து“
(அடக்கமுடைமை குறள் எண்:126)
பொதுப்பொருள் : ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
மெய்பொருள்: ஐந்து விதமான தன்மை உடைய ஐம்பொறிகளையும் ஒரே தன்மையுடைய பிராண சக்திக்குள் ஆமைபோல் உள்ளிழுக்க வல்லவனின் ஆற்றலால், அவனுடைய மூவேழு தலைமுறைகளும் காக்கப்படும். இத்தகைய ஆற்றல் உடையவர்கள் அடையாளமாக உடுத்தும் வஸ்திரமே ‘பஞ்சகச்சம்‘ என்பதாகும்.
‘கச்சம்‘ என்பதற்கு ‘ஆமை‘ என்றும் ஒரு பொருள் உள்ளது.
அதாவது ஆமைபோல் தம் ஐம்பொறிகளின் சக்தியையும் உள்ளிழுத்து தம் பிராண சக்தியாக மாற்ற வல்ல இத்தகைய ஆண்மையுடையவர்களே ‘பிராமணர்கள்‘ என்றும் அழைக்கப்பட்டார்கள். பிரம்மச்சரியத்தை இல்லறத்தில் இருந்து கொண்டும் இவ்வாறு ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கடைப்பிடிக்கலாம். எவ்வாறெனின் அறத்தின் அடிப்படையில் வாழ்ந்துகொண்டு, ஒன்றிரண்டு ‘சந்ததி‘ உருவாக்கத்திற்காக மட்டுமே தாம்பத்தியத்தை கையாண்டும், அதன்பின் இல்லறத்தில் இருந்துகொண்டே துறவறத்தை மேற்கொள்வதும் பிரம்மச்சரியமே!
இத்தகைய இல்லற தர்மத்தை கடைபிடிக்கும் ‘பஞ்சகச்சம்‘ கட்டிய பிராமணர்களின் ஆற்றலால் அவர்களின் பத்தினிகளும் இயல்பாகவே பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். அதன் அடையாளமாக அவர்கள் உடுத்தும் ‘மடிசார்‘ என்னும் உடையும், ஆச்சாரம் நிறைந்த கண்ணியமான உடையாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறது.
வள்ளுவர் பெருமான் மேலும்
“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது“. என்னும் இக்குறளை இவர்களை குறித்தே எழுதினார் போலும்.
சாய்ராம்.

