You Are That! – “மாசில்வெண்பொடி”

தேவாரம் இரண்டாம் திருமுறை:

சொற்றருமறை பாடினார்
சுடர்விடுஞ்சடை முடியினார்
கற்றருவடங் கையினார்
காவிரித்துறை காட்டினார்
மற்றருதிர டோளினார்
மாசில்வெண்பொடிப் பூசினார்
விற்றருமணி மிடறினார்
மேயதுவிள நகரதே.

பொ-ரை விளக்கம்:

சொற்றருமறை பாடினார்: சொல்தரும் மறை –

“எழுதாத புத்தகத் தேட்டின் பொருளை” என திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி மறைகள், ‘எழுதாக்கிளவி’ யாதலின் கண் வழியே காணும் எழுத்தாலன்றிச் செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். அதாவது எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர்…
அவ்வாறாயின் “வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே”. என்று ஞானசம்பந்த பெருமான் தம் மற்றொரு திருப்பதிகத்தில் பாடிய படி, வேதத்தின் மெய்ப் பொருளாய் விளங்கும் ‘நமச்சிவாய’ என்னும் நாமத்தையும் எழுத்தின் வழியே உணராமல், தகுதி கொண்டோரின் செவி வழியாக கேட்டு உணர்ந்து, அஃதினை மறவாது இடைவிடாது சொல்லப் பெறின்….
காவிரித்துறையில் அமைந்த ‘விளநகரத்தில்’ ஒளிவிடும் சடைமுடியை உடைய, செபமணி மாலையைக் கையில் கொண்ட, மற்போர் செய்தற்கு ஏற்ற திரண்ட தோள்களை உடைய, குற்றமற்ற* வெண்மையான திருநீற்றுப்பொடி பூசிய, ஒளி தரும் நீலமணி போலும் மிடறுடையவர் அருளைப் பெறலாம்.


*மாசில் வெண்பொடி:
மாசில் என்பதற்கு குற்றமற்ற என்று பொருள் கொள்ளலாம். அதாவது பசுவின் சாணம் போன்ற ‘புறபொருட்கள்’ கொண்டு உருவாக்கும் வெண்ணீறு, பூசிய ஒரு சில மணித்துளிக்குள் அதன் ஒளி குன்றி மங்கிவிடும். ஆனால் கங்காளன் பூசும் கவச திருநீறு என்பது புறப்பொருள்கள் ஏதுமின்றி ‘அகப் பொருளால்’ மட்டுமே உருவாகும் திருவெண்ணீறு. பூசிய பின் இதன் ஒளி ஒருபோதும் குன்றாமல் எப்போதும் பிரகாசித்தப்படியே இருக்கும். எனவே ‘குற்றமற்ற திருவெண்ணீறு’ என்பதை இஃதினையே கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment