பட்டினத்தார் பாடல்:
“மூச்சு என்பார் உள்ளம் என்பார்
மோனம் எனும் மோட்சம் என்பார்
பேச்சு என்பார் உன்னுடைய பேர்
அறியார் பூரணமே“
பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, விநாயகர், முருகன், திருமகள் என்னும் பேர் கொண்ட இறைவன்மார்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆயிரம் நாமங்கள் அனைவரும் அறியும்படியாகாவே உள்ளன. அவ்வாறு இருந்தும் பட்டினத்தார் பூரணத்தின் பேரை அறிந்தவர் யார் உளர்! என்பதாக ஏன் பாடியுள்ளனர்?
பிருஹதாரணியகோபநிஷத்து:1.20
சிலந்திப்பூச்சி (தன்னிடமிருந்துண்டான) நூலின் வழியே எங்ஙனம் வெளிக்கிளம்புகிறதோ, நெருப்பிலிருந்து உண்டான சிறு பொறிகள் எங்ஙனம் கிளம்புகின்றனவோ (நெருப்பின் ஒளியுடன்), அங்ஙனம் ஆத்மாவிடமிருந்து (பூரணத்திலிருந்து) எல்லா இந்திரியங்களும், எல்லா உலகங்களும், எல்லாப் பொருட்களும் வெளிப்படுகின்றன;
மெய்: என்பதிற்கு ‘உடம்பு‘ என்றும் ‘ஸத்தியம்‘ என்றும் இருபொருள் உள்ளது. பஞ்சபூதங்கள் பஞ்ச இந்திரியங்கள் பஞ்ச வாயுக்கள் மனம் புத்தி அகங்காரம் எனும் 18 விதமான தத்துவங்களுடன் உண்டான சிறுசிறு நெருப்புப் பொறிகளான ‘மெய்‘ எனும் இவ்வுடம்பு ஸத்தியமாகவே இருக்கிறது. இந்நெருப்புப் பொறிகளுக்கு ஆதாரமான ஒளிமயமான ஆத்ம ஜோதியான ‘உயிர்‘ இம்–மெய்க்கு ஸத்தியமாக இருக்கிறது.
ஆயினும் இது ஒருவராலும் எளிதில் அறிய இயலாத ரகசிய நாமமாகவே இருந்துகொண்டு இருக்கிறது.
எவ்வாறெனின் ‘ஸத்யம்‘ எனும் மெய் எழுத்து தனித்து நின்று பொருளாக முடியாது. அஃது ‘உயிர்‘ எழுத்துடன் கலக்கப் பெற்று ‘உயிர்மெய்‘ எழுத்தாக, அதாவது ஸத்யத்துக்கு ஸத்தியமாக அறியப்பெற்றால்தான் மெய் பொருளாக நிற்பதை காணலாம்.
இஃது ஸத்குருவால் மட்டுமே அறிவிக்கப்படும் ரகசிய நாமமாக ஸத்குருவின் நாமமாகவே இருக்கிறது.“தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்” என திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியபடி குருவின் இத்திருநாமம் சொல்லச் சொல்ல கிடைக்கும் தெளிவில் குருவே சிவம் எனும் தெளிவு கிட்டும்.
அஃதின்றி பூரணத்தின் பேர் அறியப்படாமல், மெய்யும் உயிரும் தனித்தனியே நின்றால், இறுதிகாலத்தில் மெய்யை விட்டு உயிர் பிரிய மெய் பொருளற்றதாகி போய்விடும்.


