“உடம்பு வருவகை அறியீர் உயிர் வருவகை அறியீர்
உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்”!
#திருவருட்பிரகாச_வள்ளலார் ஆறாம் திருமுறை உறுதி கூறல் 2
ஆண் பெண் சேர்க்கையால் ஓர் (உயிர் உடம்பு) குழந்தை உருவாகிறது. எனினும் தாயோ, தந்தையோ அல்லது அக்குழந்தையோ ‘உடம்பு’ வருவகையும், ‘உயிர்’ வருவகையும் அறிய மாட்டார்கள்.
எவ்வாறெனின் கரு உருவான பின்புதான் ‘உயிர் வருவகையும்’, அது போல குழந்தையாக வெளிவந்த பின்புதான் ‘உடம்பு வருவகையும்’ அறிவார்கள். அதாவது குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதையும், அவ்வாறு பிறந்த குழந்தையின் குறைபாடுகளையும் பிறந்த பின்பே அதன் தாய் தந்தையர்கள் அறிய இயலும். குறைபாடுகள் ஏதும் அற்ற விரும்பிய ‘உடம்பை’ தாயாலும், தந்தையாலும் மேலும் அக்குழந்தையாலுமே உருவாக்க இயலாது என்பதால் ‘உடம்பு வருவகை அறியீர்’ என்கிறார் வள்ளல் பெருமான்.
அது போல உயிர் வருவகை அறிந்திருந்தால் உருவான உடம்பை விட்டு உயிர் பிரியாத வண்ணம் காத்து அருளலாம். அதுவும் இயலாது என்பதால் ‘உயிர் வருவகை அறியீர்’ என்கிறார் வள்ளல் பெருமான்.
இவ்வாறு இவ்விரண்டையும் அறியப்பெறாது உருவான உடம்பை வளர்க்க ‘நிதம் நிதம்’ உண்டு உறங்கும் அறிவை மட்டுமே கொண்ட அறிவீலிகளை பார்த்து வள்ளல் பெருமான் சொல்லிய வார்த்தைகளே….
“கண்டதெல்லாம் அணித்தியமே கேட்டதெல்லாம் பழுதே
கற்றதெல்லாம் பொய்யே நீர் களித்த் தெல்லாம் வீணே
உண்டதெல்லாம் மலமே உட்கொண்டதெல்லாம் குறையே
உலகிலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே”!
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

