“எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.”
அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை :குறள்:896

பொதுப்பொருள்:
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.
மெய்ப்பொருள்:
தீயின் வெப்பம் சுட்டெரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோன்றே எதிர்பாராத விதமாக தீயினால் சுடப்பட்டாலும் அஃதிலிருந்து உயிர் பிழைத்து கொள்ளும் உபாயமும் எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றே !
ஆனால் பெரியவரிடத்தில் பொதிந்துள்ள ஆற்றல் என்பது எல்லோராலும் அறியவொண்ணாதது. அஃது உயர் மின்சக்தி போன்றது, அறிந்தவர்கள் அஃதினை முறையாக கையாண்டு இருளை ஒளிமயமாக ஆக்கிக்கொள்வார்கள். ஆனால் அறியாதவர்கள் சீண்டினால் அவ் ஆற்றல் கண்ணிமைக்கும் பொழுதில் வெளிப்பட்டு அத்தகையோரை எரித்து சாம்பலாக்கி விடும்.
அதாவது பெரியோர்கள் தம்மை சீண்டுபவர்களை ஒருபோதும் பொருட்டெனக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்களிடம் பொதிந்துள்ள ஆற்றலானது தக்க தருணத்தில் வெளிப்பட்டு தவறிழைத்தவர்களை தண்டித்தே தீரும், அதிலிருந்து தப்பி பிழைத்தல் என்பது இயலவே இயலாத ஒன்று, என்பதாக இக்குறளுக்கு பொருள் கொள்ளலாம்.
சாய்ராம்.

