‘இறைவன் ஒருவனே’ என்பது ஸ்ரீ சாய்நாதரின் அருள்வாக்கு.
ஏகாத்தம தத்துவம் அத்வைத சித்தாந்தத்தின் கோட்பாடு. அதாவது
இது எல்லாம் ஆத்ம சொரூபமே என்பதே இக் கோட்பாடு.
ஆத்மாவை பற்றி பிரஹதாரணியகோபநிஷத்து:3-7-23
“அவர் காணப்படாமல் காண்பவர்,கேட்கப்படாமல் கேட்பவர்,
நினைக்கப்படாமல் நினைப்பவர்,அறியப்படாமல் அறிபவர்;
அவரைக்காட்டிலும் வேறாக காண்பவர் இல்லை,
அவரைக்காட்டிலும் வேறாக கேட்பவர் இல்லை,
அவரைக்காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை,
அவரைக்காட்டிலும் வேறாக அறிபவர் இல்லை. அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர். மற்ற எல்லாம் அழிவுள்ளது.”
அதாவது ஆத்மாவும் ஒன்றே, ஆத்ம சக்தியும் ஒன்றே(அல்லது) இறைவனும் ஒன்றே இறைச்சக்தியும் ஒன்றே என்பதே அத்வைத சித்தாந்தத்தின் முடிவான கருத்து. ஸ்ரீ கிருஷ்ணரும் தம் கீதோபதேசத்தில் இவ்–ஆத்மா பஞ்சபூத கலவை கொண்ட உருவங்களால் பிளவுபட்டதுபோல
தென்படினும் அது பிளவுபடாதது என்றே உபதேசத்திகிறார்.
அதுவே நிர்குணப்ப்ரஹ்மமாக ஒளியுறுவமாக, ஒளிக்கும் பராசக்தியாக ஒவ்வொரு உருவின் உள்ளேயும் அமர்ந்து கொண்டு அருளாட்சி புரிந்துகொண்டிருக்கிறாள். எங்கும் சஞ்சரிக்கும் காற்று வளிமண்டலத்தில் நிலைபெற்று இருப்பதை போல பஞ்சபூத படைப்புக்களான ஜீவராசிகள் ஒளிக்கும் பராசக்தியை விளங்கிக் கொண்டிருக்கும் அவ் ஏகாத்தம வெளியில் அங்கும் இங்குமாய் மாறி மாறி அவரவர் பிராரப்தப்பிராகாரம் ஆட்டுவிக்கப்பட்டு சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது.
அதாவது உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் அதன் ஒவ்வொரு இந்திரியங்கள் வாயிலாக வெளிப்படும் காண்பது, கேட்பது, நினைப்பது, அறிவது என்னும் இவையாவுமே ஒரே மூலமான மூகாம்பிகையின் ஒரே உள்ளொளி சக்தியின் வெளிப்பாடேயாம்!
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாய் ஒளிரும் அப்பராசக்தியின் அருள் சத்குருவின் அருளால் கிட்டீடின் நம் பஞ்சபூத பிராரப்த உருவும் முடிவில் மறைந்து ஒளியுறுவாய் சதா ஒளிர்வதை உணரலாம்.
“ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.”
:திருமூலர் திருமந்திரம்
சாய்ராம்.

