“கற்பெனப்படுவது சொல் திறம்பாமை“
(கொன்றை வேந்தன்) என்பது ஒளவையின் வாக்கு.
இங்கு ஒளவை கற்பெனப்படுவதை உடல் மற்றும் மனம் சார்ந்தவையாகவோ அல்லது பெண் பாலருக்கு மட்டுமே உரித்ததாகவோ குறிப்பிடாமல் சொல்லுக்கு மட்டுமே உரித்ததாக குறிப்பிடுகிறார். அதாவது சொல் என்பது ஐம்புலன்களின் ஐயுணர்வான எண்ணங்களின் வெளிப்பாடேயாகும். இ ஃது வாய்மையுடையதாக, எக்காலத்தும் மாறாததாக, திரும்பி பெறமுடியாத திறன் கொண்டதாக இருத்தல் வேண்டும். இத்தகைய சொல் திறன் உடையவர்கள் யாராயினும் எவராயினும் அவர்கள் சொல்லின் செல்வர்களே. இத்தகைய சொல் திறம்பாமையே அவர்களுக்குள் கற்பெனும் சக்தியாய் உருவெடுத்து அத்தகையவர்களை அரணாய் காக்கின்றது.

இதற்கு எடுத்துக்காட்டாக : பெரிய புராணத்தில் திருநீலகண்ட நாயனார் பரத்தையின் இல்லத்திற்க்கு சென்றுவந்ததின் காரணம் அவருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் இடையில் பிணக்கு உருவாக, அவரது மனைவியார் “நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்” என்று ஆணையிட்டார். அதைக் கேட்ட நாயனார் , பரமசிவனுடைய திருநீலகண்டத்திலே தாம் வைத்த பத்தி குன்றாவண்ணம், அம்மனைவியாரைத் தொடாமல் நீங்கி, இவர் ‘எம்மை‘ என்று பன்மையாகச் சொன்னதனால் இவரைமாத்திரமன்றி மற்றப் பெண்களையும் நான் மனதினால் நினைத்தலுஞ்செய்யேன்“ என்று உறுதிகொண்டார். இத்தகைய சொல்திறனை இறுதிவரை, அதாவது இவர்களது இளமை பருவம் கடந்து முதுமையும் முடியும்வரை,வெளியுலகம் ஏதும்அறியாது இருப்பினும்,
சொல் திறன்குன்றாமல், சொல் திரும்பிப் பெறாமல், வாய்மை மாறாமல், இவ்வீறுவரும் இறைவன் சாட்சியாக கடைப்பிடித்து வந்ததின் காரணம், அதுவே அவர்களுக்குள் கற்பெனும் சக்தியாய் உருவெடுத்து இறையருள் என்னும் அரணை நல்கியது என்பதாக பொருள் கொள்ளலாம்.சாய்ராம்.

