You Are That!- “Athithi Devo Bhava”

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு”.
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான் என்பது இக்குறளின் பொதுப் பொருள்.
“அன்னத்தை மிகுதியாக உண்டு பண்ணவேண்டும், வீட்டை நாடி வந்த எவரையும் தள்ளி வைக்கக் கூடாது, வந்திருப்பவர்களுக்கு அன்னம் ஆயத்தமாய் உள்ளது என்போர் பெரியோர்கள்” –தைத்திரியோபநிஷத்
வீட்டை நாடி வரும் விருந்தினர்களை இரு வகைப்படுத்தி சொல்லியுள்ளார் வள்ளுவர். ஒன்று நமக்கு எவ்வகையிலும் அறிமுகமில்லாத, முன்னறிவிப்பு ஏதுமின்றி வீட்டை நாடிவரும்,வழிப்போக்கர்கள், யாத்திரீகர்கள், மற்றும் பசியுற்றோர் போன்ற விருந்தினர்களை ‘செல் விருந்தினர்கள்’ என்றும்,
மற்றொன்று நமக்கு நன்கு அறிமுகமான, தகுந்த முன்னேர்ப்பாடுகளுடன் வீட்டைநாடி வரும் உற்றார்,உறவினர்,நண்பர்கள் மற்றும் செல்வந்தர்கள் போன்ற விருந்தினர்களை, (விரும்பி நம்மால் வரவழிக்கப்பட்ட) ‘வரு விருந்தினர்கள்’
என்றும் இரு வகைப்படுத்தி வள்ளுவர் சொல்லியுள்ளதின் பொருள்…
‘வரு விருந்தினர்களால்’ மிகுந்த ஆதாயமும்,சகாயமும் கிடைக்கும். ஆனால் விருந்துண்டு செல்லும் ‘செல் விருந்தினர்களால் ‘அவ்வாறு ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆயினும் துளியும் பாரபட்சமற்ற தகுதியில் சமநோக்கோடு விருந்தோம்பல் இருக்கவேண்டும் என்பதிர்க்கே !
இதனை கீழ்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
ரமணாஸ்ரமத்தில் பகவான் ரமணரின் காலத்திலேயே விருந்தோம்பல் மிகச் சிறப்பாக நடக்கும். ஒரு விழாக்காலத்தில் மதிய உணவிற்காக தகுந்த முன்னேர்ப்பாடுகளுடன் வந்திருந்த ‘வரு விருந்தினர்களான’, நன்கு படித்த பண்டிதர்கள், செல்வந்தர்கள், உயர் குலத்தவர்கள் பகவான் ஸ்ரீ ரமணருடன் விருந்துண்ண காத்திருக்க, அவரைக் காணாது ஆஸ்ரம் முழுவதும் தேடினர். அப்பொழுது ஒருவர் ரமணர் காவியுடை தரித்து பசியுடன் காத்திருந்த ‘செல் விருந்தினர்களுடன்’ இவரும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து பதறிப் போய் அதற்குரிய காரணத்தை வினவ ?
ஆஸ்ரமவாசிகளில் யாரோ ஒருவர் இச் சந்யாசிகளிடம் முதலில் மேல்தட்டு மக்களின் விருந்து முடிந்துதான் இவர்களுக்கு அன்னம் வழங்கப்படும் என்று கூறியதாகவும், தாமும் இவர்களில் ஒன்றுதான் என்பதால் செல் விருந்தினராய் நிற்பதாகவும் ரமணரிடம் இருந்து பதில் உரை வந்தது.
உடனே ஆஸ்ரமவாசிகள் அனைவரும் சேர்ந்து தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோர, அதன் பின் முதலில் ‘செல் விருந்தினரை’ ( நாராயண சேவையாக ) வரவேற்ற பின்னரே வரு விருந்தினரை உபசரிக்கும் வழக்கம், இன்றளவும் தவறாமல் கடைபிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது. இச் செயல் மூலம்…
வானோர்க்கு பகவான் ரமணர் நல்விருந்தினராகி திரு அண்ணாமலையாரின் அருளுக்கு பாத்திரமானது அனைவரும் அறிந்ததே !

இவ்வாறே ஸ்ரீ ஸ்ரீதர அய்யவாள் அவர்களும் ஒரு சிரார்த்த தினத்தன்று பசியுடன் வந்த ஒரு ஏழைக்கு, பிராமணர்கள் உணவருந்து முன் அன்னமிட அதைக் கண்டு, மனவருத்தம் அடைந்த பிராமணர்கள் இட்ட கட்டளையின் படி, தம் வீட்டின் கிணற்றிலிருந்து கங்காஷ்டகம் சொல்லி கங்கையை வரவழித்து, அதன் மூலம் தாம் வானோர்க்கு நல் விருந்தினரே என்பதை நிரூபித்துக் காட்டினார்.
எனவேதான் வள்ளுவர் செல் விருந்தை முதலில் ஓம்பி வரு விருந்தை பின்னர் பார்க்குமாறு நமக்கு இக்குறள் மூலம் அறிவுரை வழங்குகிறார்.
சாய்ராம்

Leave a comment