ஶ்ரீ குருப்யோ நமஹ ,🙏

“கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும் பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயைவைத் தார்களே.”
ஆடும் இலையமும்: தாவரங்களின் இலைகளின் அசைவில் இருந்து வெளிப்படும் பிராணவாயுவை, வாசியாக, சிவமாக ஆனால் அதை அறியாமலேயே, சுவாசமாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்த மானுட கூட்டிற்கும், அதாவது உடம்பிற்கும், தாவரங்களின் ஆடும் இலையில் இருந்து வெளிப்படும் வாசியாகிய சிவத்திற்கும். இடையில் உள்ள சுவாசம் என்னும் உறவு அறுபட்டு, ஒன்றுமில்லாமல் போகும்போது…
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை:
இவ்வுடல் வெறும் கூடாகி , அதாவது சவமாகி போக, அது வீட்டின் கூடத்தில் கிடந்தது ஆனால், “மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்” என்னும் திருமூலரின் மற்றொரு திருமந்திர உரையின்படி, உடல் என்னும் கூடம் கிடந்தது ஆனால் அதில் கோலங்கள் எனும் அழகு பொருந்திய சிவ வடிவம் அங்கில்லை, மாறாக சவ வடிவமே அங்கிருந்து…
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்:
கடைவீதியில் அந்த சவத்தை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு செல்லும் போது, சிலர் பாடிக்கொண்டும், சிலர் அழுது புரண்டு கொண்டும் மயானம் வரை சென்று…
தேடிய தீயினில் தீயைவைத் தார்களே;
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்” என்ற மற்றொரு திருமூலரின் திருமந்திர உரையின்படி,
ஒவ்வொரு மனித உருவாகவே இருக்கும் சிவலிங்கம் வடிவமானது, தேடி தன்னை அறிந்தவர்களுக்கு காக்கும் அருட்பெரும் ஜோதியாகவும், அவ்வாறு தேடாமல் தன்னை அறியாதவர்களுக்கு, அதே சிவமானது அழிக்கும் சிவமாக, தானே தேடியே தீயாக மாறி, அதாவது, ஆடும் இலையில் இருந்து சிவமாய் வெளிப்படும் எந்த பிராண வாயுவானது மனித உயிர் வாழ காரணமாகின்றதோ, அந்த சிவமே, சவமாகிப் போன மனித உடம்பை சாம்பலாக்கும் அக்னி எரியவும் காரணமாகி விடுவதால், அத்தகைய தேடிய சிவமாகிய தீயினுள் இச் சவத்தை வைத்து தீயை வைத்தார்களே.
திருச்சிற்றம்பலம் ,,🙏

