ஸ்ரீ குருப்யோ நமஹ🙏

ஆர்அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை,
ஆர்அறிவார் இந்த அகலமும் நீளமும்,
பேர்அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின்,
வேர் அறியாமை விளம்புகின் றேனேl
ஆர்அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை:
ஆர், என்பதற்கு நிறைவு, கூர்மை, அழகு, காண்க என்று பொருள்கள் உள்ளது. இங்கு திருமூல நாயனார் எங்கள் என்று பன்மையில் குறிப்பிட்டது, தம்மையும் தம்முள்ளேயே வியாபித்திருக்கும் தேவகணங்களையும், பூதகணங்களையும் சேர்த்தே யாம்! ஆகையால்தான் தம்மை போன்றே இத்தகைய நிறைவை தம்முள்ளேயே காண்பவர் எவரோ, அவர்கள்தான் எங்கள் அண்ணலின் பெருமையை அறிவார்கள் என்கிறார்…
ஆர்அறிவார் இந்த அகலமும் நீளமும்:
இவ்வாறாக அண்ணலின் பெருமையை தம்முள் அறிந்தவர்களே, ஆகாயத்திற்கும் பூமிக்கும் குறுகிலும் நெடுகிலும் அதற்கு அப்பாலும் அக்ஷரமாக வியாபித்திருக்கும் அண்ணலின் அகலத்தையும், நீளத்தையும், கூர்மையாக கண்டறிந்து, அதனை பிண்டமாகிய தம் உடம்பின் உள்ளே அமையப்பெற்றிருக்கும் அகல நீளத்துக்குள், பெருமைமிக்க அவ்- அக்ஷரத்தை முறையாக பொருத்தி அறிய முடியும்…
பேர்அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின்:
இவ்வாறு அரிதற்கு அரியதான அக்ஷரம் அறியப்பட்டு உணரப்படும் போது வெளிப்படும் பெருஞ்சுடர், அது அறிவிற்கு அறிவாய் அதாவது அறிவு என்பது உதயமாக முன்னரே இருந்து கொண்டிருப்பதால் இருப்பதால், அதன் பேர் என்பது அறியப்படாத ஒன்றாகவே உள்ளது… எனவே..
வேர் அறியாமை விளம்புகின் றேனேl
இவ்வாறு பேர் அறியாத,வேர் அறிய இயலாத, அடிமுடி காண இயலாத பெருஞ்சுடரை, ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாக போற்றி விளம்புகின்றேனே!
திருச்சிற்றம்பலம், 🙏

