திருமூலரின் திருமந்திரம் உரை எண் 309 ன் விளக்கம்:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே”

மரத்தை மறைத்தது மாமத யானை: சிற்பியால் வடிவமைக்கப்பட்ட மாமத யானை போன்ற உருவத்தை மட்டுமே பார்த்து உணரும்போது போது, அதன் மூலப்பொருளான மரம், மாமத யானையின் உருவத்தால், அதாவது மரத்தை மறைத்த மாமத யானையாக மட்டுமே அது அறியப்பட்டதின் காரணம், அதன் மூலப் பொருளான மரம் உணரப்படாமல் போய்விடுகிறது.

பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்: பரம் என்பதற்கு வீடுபேறு என்றும், பார்முதல் பூதம் என்பதற்கு நிலம் என்னும் பூதம் என்றும் பொருள்கள் உள்ளது. வீடுபேறு என்பது அடையக்கூடிய பேறு அல்ல, மாறாக அது என்றென்றும் இருந்து கொண்டிருக்கும் ஒரு இயல்பான பெரும் பேறு. அதிலிருந்து உருவாகிய நிலத்தின் தன்மை கொண்ட மனித உருவத்தால், பரத்தை மறைத்த பார்முதல் பூதமாக, மூலமான வீடுபேறு மறைக்கப்பட்டு உடல் மட்டுமே உணரப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே” குரு அருளால் பார்முதல் பூதம் என்னும் இவ்வுடம்பால் மறைக்கப்பட்ட மறைப்பு நீங்கிய அக்கணமே, நிரந்தரமாய் என்றென்றும் இருந்து கொண்டிருக்கும் பரம் என்னும் வீடுபேறு உணரப்படும். அதாவது பரம் என்னும் வீடு பேற்றில், பார் முதல் பூதம் என்னும் இவ்வுடம்பு, எவ்வாறு கடலின் உப்புத்தன்மையிலிருந்து தோன்றிய உப்பின் உருவம் மீண்டும் அக்கடலிலேயே கரைந்து மறைந்து போய் விடுகிறதோ, அவ்வாறே பரத்திலிருந்து தோன்றிய பார் முதல் பூதம் என்னும் இவ்வுடம்பு மீண்டும் பரத்திலேயே கரைந்து மறைந்து போய்விடும்.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment