
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
ஏராளமான ஆற்றல் மூலங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
1. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எடுத்துக்காட்டு,
*சூரிய சக்தி: ** காற்று: ***நீர்மின்சாரம்
2. புதுப்பிக்க முடியாத ஆற்றல், எடுத்துக்காட்டு,
* நிலக்கரி** எண்ணெய் *** இயற்கை எரிவாயு போன்றவைகள்.
இதே போன்று ஒவ்வொரு மனிதனிலும் உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது, “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்னும் வள்ளுவரின் திருக்குறள் கோட்பாட்டின்படி, இறப்புக்கு ஒப்பான உறக்க நிலைக்குச் சென்று, உறக்கத்திலிருந்து பிறப்பிற்கு ஒப்பான அதே விழிப்பு நிலைக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலாக திரும்புதல் போன்றது எனலாம். இது சக்தியின் அம்சமான அபிராமி அன்னையின் அருளால் மட்டுமே நிகழக்கூடிய ஒரு நிகழ்வு..
அதே போன்று ஒவ்வொரு மனிதனிலும் மறைந்துள்ள புதுப்பிக்க முடியாத ஆற்றல் என்பது, இறப்புக்கு ஒப்பான உறக்க நிலைக்குச் சென்று, அதுவே மீளாத தூக்கமாக ஆகி, பின் வேறு புது ஆற்றலாக மாறி போய் விடுவதைப் போன்றது எனலாம். இது காலசம்ஹார மூர்த்தியான சிவத்தாலையே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

என்றும் பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேய முனிவரின் சரித்திரத்தில், இறப்பிற்கு அதிபதியான எமதர்மராஜன் மார்க்கண்டேயரின் உயிரை உரிய தருணத்தில் பறிக்க வந்த போது, கால சம்ஹார மூர்த்தி, தனது இடப்பாகத்தை கொண்டுள்ள அபிராமி அன்னையின் இடது காலால் எமனை வதைத்ததாலேயே, இறப்பிற்கு ஒப்பான உறக்க நிலைக்கு எமன் தள்ளப்பட்டாலும், அபிராமியின் அருளால் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு, அதாவது புதுப்பிக்கப்பட்ட நிரந்தர ஆற்றலாக, கால சம்ஹார மூர்த்தி எதிரிலேயே வீற்றிருக்கும் அருள் கிட்டியது.
அவ்வாறின்றி எமன், வலப்பாகத்தை கொண்டுள்ள கால சம்ஹார மூர்த்தியின் வலது காலால் வதைக்கப்பட்டிருந்தால், இறப்புக்கு ஒப்பான உறக்க நிலைக்கு எமன் தள்ளப்பட்டு, அது மீளாத தூக்கம் ஆகி மீண்டும் உயிர்பிக்க முடியாத, புதுப்பிக்க முடியாத ஆற்றலாகி, பின் வேறொரு புது உருவம் கொண்ட ஆற்றலாக மாறிப் போய் இருக்கும்.
எனவே ஒருவர் கால சம்ஹார மூர்த்தியின் இடப்பாகத்தை கொண்டுள்ள அபிராமி அன்னையின் திருவடியை நாடினால், இறுதி காலம் வரும்போது, அவளின் இடது காலால் வதைக்கப்பட்டு, இறப்பு என்னும் உறக்கத்தில் தள்ளப்பட்டாலும், அதே அபிராமி அன்னையின் அருளால் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட நிரந்தர விழிப்புணர்வு கொண்ட ஆற்றலாக உருபெற்று , எமனைப் போன்று அழியா பெருநிலையை அடையலாம்.
திருச்சிற்றம்பலம், ,🙏

