ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

வியாபாரத்திற்கு பதிலாக படைப்பு உழைப்பையும், முட்டாள்தனத்திற்கு பதிலாக ஆர்வத்தையும் விரும்புவோருக்கு, நம்முடைய இந்த அற்பமான உலகில் இடம் கிடைக்காது.
ஹெர்மன் ஹெஸ்ஸி
ஆர்வம் என்பதற்கு நாட்டம் என்று ஒரு பொருள் உள்ளது. இத்தகைய நாட்டத்தை எங்கு வைக்க வேண்டும் என்று திருமூலரின் திருமந்திர உரை விளக்குகின்றது.
“நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ னாமே”
எல்லாவற்றையும் ஒரு பரமேஸ்வர சக்தி. இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது பகவான் ரமண மகரிஷியின் அனுபவ அருள் உபதேசம். அதுபோன்று சக்தி என்பது உருவாக்கவோ அல்லது அழிக்கவோ இயலாது, மாறாக அது ஒரு வடிவத்தில் இருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறும் என்பது அறிவியல் கோட்பாடு.
அவ்வகையில் எங்கும் வியாபித்துள்ள சக்தி, விருப்பம் என்னும் நாட்ட சக்தியாக, ஒவ்வொரு மனித ரூபங்களுக்கும் தனித்தனி என்பது போல் வெளிப்போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய நாட்டச் சக்தி, அவரவர்களின் மரணத்திற்கு பிறகும், அதாவது அவர்களின் உருவங்கள் அழிந்தாலும், அத்தகையவர்கள் எதன் மீது நாட்டம் கொண்டிருந்தார்களோ அதனதன் வடிவின் சக்தியாகவே மாறி வெளிப்படுமேயன்றி, இந்- நாட்ட சக்தி என்பது ஒருக்காலும் அழியாது.
உதாரணமாக மண்ணாசை கொண்டு மண்ணின் மீது தோன்றும் மரங்கள், பயிர்கள் மற்றும் தாவரங்கள் மீது ஒருவரின் நாட்ட சக்தி இருந்தால், அவர்கள் இறந்தபின் ஏதோ ஒரு தாவர வடிவின் சக்தியாகவும், வளர்ப்பு மிருகங்களின் மீது நாட்ட சக்தி இருந்தால் இறந்தபின், அதனதன் வடிவம் கொண்ட சக்தியாகவும், மேலும் எந்தெந்த குணங்களின் மீது நாட்ட சக்தி இருந்ததோ அந்தந்த குணங்களின் வடிவம் கொண்ட ஜீவராசிகளின் சக்தியாகவே அதாவது மறுபிறப்பாகவே மாறிவிடும்.
மாறாக திருமூலர் தம் திருமந்திரத்தில் உரைத்தபடி, ஒருவர் தம் நாட்ட சக்தியை, குருவே சிவமென நாட்டம் கொண்டு, இவ்வுடம்பு இயங்க காரணமாக இருக்கும் மூச்சினை கொண்டு தம் இரு நாசி துவாரங்கள் வழியாக நடு மூக்கான புருவ மத்தியில் ஊட்ட சக்தியாக வைத்தால்…
அவ் உடம்புக்கு சோர்வு இல்லை, அழிவில்லை, அலைபாயும் மன ஓட்டம் இல்லை, தனித்துவமான நான் என்ற அகங்கார உணர்வு இல்லை, தேட்டம் என்னும் தேடுதல் இல்லை, மாறாக அவனே சிவமென அதாவது எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் நிலையான, என்றும் மாறாத பரமேஸ்வர சக்தியாகவே விளங்குவான்.
” அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.”
என்ற வள்ளுவரின் திருக்குறளின் படி, இத்தகைய நாட்டம் ஒருவருக்கு அருள் இருந்தால் தான் கிட்டும். அப்படிப்பட்டவர்களுக்கு அவ்வுலகத்தில் இடம் உண்டு அற்பமான இவ்வுலகில் இடமில்லை.
திருச்சிற்றம்பலம், 🙏

