
“கலையாத கல்வியும், குறையாத வயதும்”, என்பதற்கு அடுத்ததாக “ஓர் கபடு வாராத நட்பும்,கன்றாத வளமையும்” – வேண்டி அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் கேட்கிறார்.
ஓர் கபடு வாராத நட்பும்: கபடு என்பது சூது, வஞ்சனை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று வள்ளலார் முருகனிடம் முறையிட்டது போல், கபடு என்பது ஒருபோதும் வாராத நட்பு வேண்டி ஏன் அபிராமி அன்னையிட முறையிடுகிறார்.?
ஏனெனில் நட்பில் கபடு வந்தால், அதனால் ஒருவரிடம் உள்ள கல்விக்கும் வீரத்திற்கும் குறைவு ஏற்படாது எனினும், அலைமகளின் அருளால் வளமை கிட்டினாலும் கூட அது நிச்சயம் குன்றி போய்விடும்.
அதாவது எவ்வாறு மகாபாரதத்தில் தர்மர் கௌரவர்களின் கபடு நட்பின் காரணமாக ஶ்ரீ கிருஷ்ணனின் அருளால் கிடைத்த இந்திரபிரஸ்த வளமை அனைத்தையும் இழந்தாரோ அவ்வாறே! எனவேதான் அபிராமி பட்டர் கலைமகள் மற்றும் மலைமகளின் அருளோடு, சேர்த்து அலைமகளின் அருளை கேட்காமல், துரியோதனனை போன்ற ஓர் கபடு வாராத நட்புக்கு அடுத்ததாக, கன்றாத வளமைக்கு அதிபதியான அலைமகளின் அருளை அபிராமி அன்னையிடம் கேட்கிறார்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

