
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
உணர்விந்து சோணி உறவினன் வீசும் புணர்விந்து வீசுங் கதிரில் குறையில் உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.
உணர்விந்து சோணி உறவினன் வீசும்: சோணி: என்பதற்கு இரத்தம் என்று ஒரு பொருள் உள்ளது. “ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்” இதுவும் ஒரு திருமந்திர சொல் தான். அதாவது ஊன் என்னும் இவ்வுடம்பை உணர்வானது பற்றி நிற்கும்போது தான் அது மந்திரம் ஆகிறது. அவ்வாறு உணரவானது உடம்பைப் பற்றி உறவாடும் போது, இவ்- உடம்பினுள் உள்ள இரத்தம் யாவும் உறைந்து விந்துவாக வீசும் ஒளிக்கதிர்களின் பேரின்பத்தில்…
புணர்விந்து வீசுங் கதிரில் குறையில்: ஒரு பெண்ணை புணர்ந்து அதன் வழியே தம் உடலில் இருந்து வெளிப்படும் விந்துவில் வீசும் ஒளிக்கதிரில் நாட்டம் குறையும். அதாவது சிற்றின்பத்தில் நாட்டம் இல்லாமல் போகும்.
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில் :
இவ்வாறு சிற்றின்பம் மூலம் வெளிப்படுத்தும் விந்துவை தம் கட்டுக்குள் கொண்டு வந்து, உணர்வும் உடம்பும், ஒன்றோடு ஒன்று மந்திரமூலம் இடைவிடாது பொருந்துதலால் கிட்டும் பேரின்பத்தில் நிலைத்து நிற்கில்…
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே: கால்: என்பதற்கு பிரிவு என்று பொருள் உள்ளது. அதன்படி உணர்வும் உடம்பும் ஒன்று மற்றொன்றை, தம்மிடமிருந்து பிரிந்து செல்ல ஒருபோதும் விடவே விடாது..
திருச்சிற்றம்பலம், 🙏

