
“கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே”.
“நவகண்ட யோகம்” என்னும் யோகப் பயிற்சி ஒன்று உண்டு. இதில் அந்த யோகத்தை பயில்பவர் தம்முடைய உடம்பை ஒன்பது தனித்தனி பாகங்களாக தாங்களே பிரித்துக் கொண்டு யோகம் பயில்வார்கள். பின்பு தாங்களே மூலத்தோடு மீண்டும் ஒன்பது கண்டங்களையும் இணைத்துக் கொண்டு, ஒரே கண்டமாகவும் அதாவது ஒரே உடம்பாகவும் தம்மை ஆக்கிக் கொள்ள இயலும். இத்தகைய நவகண்ட யோகம் பற்றிய தகவல்கள் சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி போன்ற பண்டைய இலக்கியங்களிலும், கோயில் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. கடந்து போன சில நூற்றாண்டுகளில் வாழ்ந்த நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர், வள்ளல் பெருமான், மகான் சீரடி சாய்பாபா, பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் போன்றோர்கள் கூட இத்தகைய நவகண்ட யோகத்தை பயிற்சி செய்ததாக அவரவர்களின் வாழ்க்கை குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது நவ கண்டம் யோகம் என்பது, ஒருவர் தம் உடம்பை ஒன்பது கண்டங்களாக தாங்களே தனித்தனியே பிரித்துக் கொண்டு, தம் ஒரே பிராண சக்தி மூலம் இவ் ஒன்பது கண்டங்களையும் ஒரே கண்டமாக, அதாவது எவ்வாறு பொதுவான மனிதர்களின் ஸ்தூல, சூட்சம, காரண சரீரம் என்னும் இம்மூன்று தனித்தனி தேகங்களும் ஒரே உணர்வுக்குள் அடங்கப் பெறுகின்றனவோ, அவ்வாறே வெட்டவெளி எனும் ஒரே உணர்வுக்குள் உள்ளடங்கிய உடம்பாக கண்டுணரும்போது,
அவர்தம் கண்டங்கள் ஒன்பதிலும் சிவசக்தியானது ஒரே அரும்பொருளாய் ஒளிர்வதை காண்பார்கள்.
மேலும் இவ்வாறு தம் கண்டங்கள் ஒன்பதையும் ஒரே கண்டமாக கண்டுணர்பவர்களின் பிரிக்கப்பட்ட உடம்பின் ஒன்பது பகுதிகளில் எப்பகுதியை தொட்டாலும் முழு உடம்பையும் அதாவது எல்லா கண்டங்களையும் தொட்ட உணர்வு அவர்களுக்கு உருவாகும்.
இப்படிப்பட்ட அரிய நவகண்ட யோகத்தை பயின்றவர்களின் உடம்பில் உள்ள உயிரணுக்கள் யாவும் எக்காலத்தும் தம்மை உயிர்பித்துக் கொண்டே இருக்கும் என்பதால், மற்ற உயிரற்று போன தேகங்கள் போல் சிதையாமல், மாறாமல், அப்படியே இருக்கும் என்பதால், இப்படிப்பட்டவர்களின் தேகம் ஒருபோதும் உயிர் நீக்கப்பட்ட உண்ணும் அசைவ பொருளாக இம்மண்ணுக்கு இரையாகவே முடியாது.
மாறாக இவர்களின் தேகம் என்றென்றும் சைவமாகவே, சுத்த சைவமாகவே, கடும் சுத்த சைவமாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
திருச்சிற்றம்பலம், 🙏

