
“எமனை விரட்டிய நந்தியம் பெருமான்”
திருவைகாவூர் வில்வவனநாதர் கோயிலுக்கு சென்று இருந்தேன், இது திருஞானசம்பந்த பெருமானால் பாடல் பெற்ற தேவார ஸ்தலமாகும்.

இக்கோயிலில் “தனது ஆயுட்காலம் முடியும் தருவாயில் இருந்த வேடன் ஒருவன், சிவராத்திரி தினத்தன்று தன்னை துரத்தி வந்த புலியிடமிருந்து தம் உயிரை காத்துக் கொள்ள, அங்கு இருந்த வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, அன்று இரவு முழுவதும் தம் உயிர் மீது கொண்ட பயம் காரணம் வில்வ இலைகளை, அம்மரத்தின் கீழே வீற்றிருந்த சிவலிங்கத்தின் மீது தானே அறியாமல் ஒவ்வொன்றாக பறித்துப் போட, ஆனால் அதுவே சிவனுக்கு சிறந்த பூசனையாக மாறிப்போனதின் காரணம்…
சிவபக்தனாக மாறிய அவ்-வேடன் உயிரை அதற்குரிய தருணத்தில் பறிக்க வந்த எமனிடமிருந்து காப்பாற்ற, நந்தியம் பெருமான் சிவபெருமானுக்கு நேர் எதிராக கோபுர வாயிலை நோக்கி திரும்பி தம் சுவாசத்தின் மூலம் எமனை கட்டுப்படுத்தியதாக” தலவரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்“ என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் உரை செய்தபடி,
இக்கோவிலில் உள்ளே நுழைந்தால் மற்ற கோவில் போல் நந்தியம் பெருமான் சிவபெருமானை நோக்கி அமராமல், கோயில் வாயிலை நோக்கி திரும்பி அமர்ந்திருப்பதை காணலாம். அவ்வாறே அம்மன் சன்னதியிலும் நந்தியம் பெருமான் அம்பிகைக்கு நேர் எதிராக திரும்பி அமர்ந்திருப்பதைப் போன்றே கோலம் இருக்கும்.
இக்கோயிலை சென்று தரிசத்து பின்பு என் மனதில் எழுந்த ஓர் கேள்வி, எமனை விரட்ட நந்தியம் பெருமான் எதற்காக சிவபெருமானுக்கு நேர் எதிராக திரும்பி, தம் சுவாசத்தின் வழியாக இச்செயலை செய்ய வேண்டும் என்று.

பகவத்கீதை: அத்.4, ஸ்லோகம்.29 மற்றும் 30 ல் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு உபதேசிக்கிறார். அபானவாயுவில் பிராணனையும், பிராணவாயுவில் அபானனையும் ஆகுதி செய்யும் சிலர் பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்துப் பிராணாமயத்தில் ஈடுபடுகின்றனர். முறையாக உண்ணும் வெகு சிலரே பிராணனில் பிராணனை படைக்கின்றனர்” என்று.
அதாவது பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்து எமனை கட்டுப்படுத்த முடியாது. அதன் காரணம் நந்தியம் பெருமான் ‘நமசிவாய’ என்று சிவனை நோக்கி ஜெபித்துக் கொண்டிருந்த போது எமனை கட்டுப்படுத்த இயலாமல் அனுமதித்து விட்டார். இவ்வாறு எமனை உள்ளே அனுமதித்ததின் காரணம், நந்தியம் பெருமான் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளானதால் பயந்துபோய்,
அதன் பின்னரே எமனை சிவனிடம் நெருங்க முடியாமல் கட்டுப்படுத்த, சிவபெருமானுக்கு நேர் எதிராக திரும்பி தம் முறையான சுவாசத்தால் ‘சிவாய நம’ என மாற்றி ஜெபித்து, அதாவது ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியது போன்று தம் பிராணனில் பிராணனை முறையாக படைத்து, அதன் மூலம் எமனை தம் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, சிவபெருமானுக்கு நேர் எதிராக திரும்பி இந்நிகழ்வை நிகழ்த்தி இருக்க வேண்டும் என்பதாக பொருள் கொள்ளலாம்.

மேலும், “அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே”. என்று
திருமூலரும் தம் திருமந்திரத்தில் இவ்வாறு உரை செய்துள்ளார். அதாவது தம் அறிவில் தெள்ளத் தெளிந்து, அதன் வழியே தம் சீவனையே சிவலிங்கமாக கண்டறிந்தவர்கள், அதுவரை ‘நமச்சிவாய’ என்று தம் நாவால் ஜெபித்து வந்த வழிமுறையை தம் வாசியால் ‘சிவாய நம’ என மாற்றி இடைவிடாது ஜெபிக்கும் போது, அத்தகையவரின் அகத்துக்குள் குரு வடிவாய் குடி கொண்டிருக்கும் நந்தியம் பெருமான், அவர்களின் கோபுர வாசலாக இருக்கும் வாயில் நோக்கி திரும்பி, எமனை உள்ளே வரவிடாமல் காத்து அருள்பாலிப்பார் என்பதை உணர்த்துவதற்காக, இக் கோவிலில் எங்கும் இல்லாத இத்தகைய அமைப்பை விசேஷமாக நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்க வேண்டும்.
திருச்சிற்றம்பலம், 🙏

