
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏எழுத்தறிநாதேஸ்வரர் எனும் அக்ஷரபுரீஸ்வரர் திருக்கோவில் திருஇன்னம்பர் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. இங்குதான் சிவபெருமான் அகஸ்திய மகரிஷிக்கு உயிரெழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, என்னும் இலக்கணத்தை கற்பித்ததாக வரலாறு உள்ளது.

“நீயாக நான் நிற்பது என் நாளோ” என்று தாயுமான சுவாமிகள் பாடிய பாடலின் இவவரிகளை, எழுத்தறி நாதேஸ்வரர் என்னும் நாமம் தாங்கிய இவ் இறைவனின் முன் நின்று, “நானாக நீ நிற்பது என் நாளோ” என்று மாற்றிப் பாடி மனம் உருகி வேண்டி நின்றால்…
அக்ஷரபுரீஸ்வரர் ஆக இங்கு விளங்கும் சிவபெருமான், அகஸ்திய மகரிஷிக்கு அருளியது போல் வேண்டுபவர் யாவருக்கும், உயிர், மெய், மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள், அவனைப் போன்றே நம்மிலும் எவ்வாறு விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அக்கணமே அறிவித்து, மேலும் எழுத்தறி நாதனாக நம்முள்ளும் குடி புகுந்து நீங்காமல் என்று அருள் புரிவான்.
இதன் பெருமைகள் பற்றிய ஒரு விளக்கக் கட்டுரை:

Hazrat Rumi says: “Do not see yourself as a body made of clay; see yourself as a letter of aksharam reflecting the divine beauty.”
ஹஸ்ரத் ரூமி கூறுகிறார்: “உங்களை களிமண்ணால் ஆன உடலாகப் பார்க்காதீர்கள்; தெய்வீக அழகைப் பிரதிபலிக்கும் அக்ஷர எழுத்தாக உங்களைப் பாருங்கள்.”

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்பது ஔவையார் வாக்கு.
தமிழ் மொழியில் எவ்வாறு எழுத்துக்கள் உயிர், மெய், மற்றும் மெய்யோடு உயிர் சேர்த்து உயிர்மெய் எழுத்துக்கள் என்று வடிவமைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறே ஒவ்வொரு மானுட தேகத்திலும் குடிகொண்டு உள்ள உயிர் என்பதும் மெய் என்னும் உடல் என்பதும், அக்ஷர எழுத்துக்களால் தான் ஆனால் எவரும் அறியாவகையில் ரகசியமாக இறைவனால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரகசிய எழுத்துக்கள் அக்ஷரமாக ஒவ்வொருவர் உயிரிலும், உடம்பிலும் எவ்வாறு விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவிப்பவர் எவரோ? அத்தகைய அவரே, ‘அதிவீரராம பாண்டியர் தம் நறுந்தொகையில்’ குறிப்பிட்டுள்ளபடி “எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதாகவும் ஆகிறார்”. அதாவது குரு வடிவாக எவர் வந்து இவ் ரகசிய எழுத்துக்களை அறிவிக்கின்றாரோ, அவரே இறைவன் ஆகும் என்பதே இதன் மெய்பொருளாக ஆகிறது.

மிகவும் அழகுற தான் உருவாக்கிவிட்ட ஓவியத்தைப் பார்த்து ஒரு நல்ல ஓவியன் தானே பெருமைப்பட்டு போவதுபோல் தான் உருவாக்கிய மனிதனைக் குறித்து இறைவன், தானே மிகவும் பெருமைப்பட்டு தன் திருமறையில் இவ்விதம் பகர்கின்றான்.
“Al lnsanusirri Va Anasirrahu”
மகிமைக்குரிய பொக்கிஷங்கள் அனைத்தையும் நாம் நம்மில், கொண்டிருப்பது போல், மனிதனிலும் உருவாக்கி, தானே அதை அவன், கண்டு விடாதபடி, அதனை மறைத்தும் வைத்திருக்கின்றோம்.
இத்தகைய தெய்வ அம்சங்கள், பொக்கிஷங்களாக தன்னில் மறைந்திருப்பதைத் தான் கண்டு அறியப்பெற, தான் அதுவாக மாறிவிட, ஓர் சிறந்த சான்றோனை தேடி, நாடி அறிந்து கொள் என்று நம் குர்ஆனே ஷரீஃபில் இறைவன்,
‘Obthaghu ilaihil Vaseelatha’ என்ற தொடரால் மனிதனை ஆசீர்வதித்துள்ளான். இது எம் குரு “விழிப்பு” என்னும் புத்தகத்தில் அருளியது.

ஆகையால் தான் ஔவையாரும் ஹஜ்ரத் ரூமி கூறியுள்ளது போல், இத்தகைய ரகசிய எழுத்துக்களை ஒருவருக்கு அறிவித்த ஆச்சாரியனை அவ்வெழுத்து வடிவாகவே தம் கண்களுக்கு ஒப்பாக, அதாவது கண்கள் இரண்டாக இருந்தாலும் எவ்வாறு பார்வை மட்டும் ஒன்றாகவே உள்ளதோ, அவ்வாறே ஆச்சாரியனை தம் உயிரிலும், தேகத்திலும் ஒரு சேர பிரதிபலிக்கும் எழுத்தாகவே, எழுத்தறிநாதனாகவே, அக்ஷரபுரீஸ்வரராகவே எண்ணும்படி அறிவுறுத்துகிறார்… இவ்வாறு ஒருவர் தம் இரு கண்களுக்கும் ஒப்பாக, எழுத்துக்களை தம் உயிராகவும் உடம்பாகவும் எண்ணும்போது…

ஆச்சாரியன் முதல் எழுத்து வடிவம்; சிஷ்யன் பின்னெழுத்து வடிவம், வித்தை சந்திக்கும் இடம்; உபதேசம் சந்தியைச் செய்விப்பது ; என்று தைத்தரியோ உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளபடி,

இரு கண்களுக்கு ஒப்பான இவ்விரு எழுத்துக்களின் சந்திப்பால், மெய்யுடன் உயிர் கலந்து ஓர் உயிர்மெய் எழுத்தாகவே உருமாறி, எழுத்தறிநாதன் எனும் அக்ஷரபுரீஸ்வரருடன் இரண்டறக் கலந்து அழியாமை என்னும் பெரும் பேற்றை எய்தும்!!
திருச்சிற்றம்பலம், 🙏

