
“ஒவ்வொரு கஷ்டத்துக்கும் நடுவில் வாய்ப்பு வருகிறது.” ~ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆம், உண்மைதான், ஒவ்வொருவரின் கஷ்டங்களுக்கு மத்தியிலும் ‘அருள்’ வாய்ப்பு வடிவில் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வெளிப்படும். அந்த வாய்ப்பு முறையாக உணரப்பட்டு பயன்படுத்தப்பட்டால், கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் வெகு சீக்கிரம் விலகிவிடும். ஆனால் அந்த வாய்ப்பை அறிவதற்கு ஒன்று இறை நம்பிக்கை இருக்க வேண்டும் அல்லது தன்னம்பிக்கையாவது இருக்க வேண்டும். இவ்விரண்டுமே இல்லாமல் போனால் உருவான வாய்ப்பு பயனற்றதாகிப் போய்விடும். அதன் காரணம் படும் கஷ்டங்களுக்கும் விடிவே இல்லாமல் போகும்.
“எங்கெங்கு இருந்துஉயிர் ஏதெது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி ” என்பதை இறை நம்பிக்கை கொண்டவருக்கும்,
“ஏங்காது உயிர்த்திரள் எங்கெங்கு இருந்தன ஆங்காங்கு அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி” என்பதை தன்னம்பிக்கை கொண்டவருக்கும்,
என வள்ளல் பெருமானும் தம் அகவல் (168 and 772) ல் இவ்வாறு பாடியுள்ளார். இதன் மூலம் நம்பிக்கையை மட்டும் ஒருவர் இழக்காமல் இருந்தால் போதும், அது எத்தன்மையை கொண்டிருந்தாலும், அத்தகையோர் ‘அருட்பெருஞ் ஜோதியின் அருளை’ வாய்ப்பு வடிவில் எத்துணை கஷ்டங்களுக்கு மத்தியிலும் அறியலாம். மாறாக நம்பிக்கை அற்றவர்கள் உள்ளத்தில் வாய்ப்பே எதிரில் வந்து நின்றாலும் அவர்களால் உணரஇயலாது.

