ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.
திருமூலர் திருமந்திரம்:
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு:
எவரொருவர் தம் இறைவனை, தாம் உயிர் வாழ முதன்மை காரணமாக இருக்கும் உள்ளே போய்க்கொண்டிருக்கும் பிராண வாயுவாகவும், அந்த வாயுவால் புறத்தில் கட்டப்பட்டும், தாங்கப்பட்டும் விளங்கிக் கொண்டிருக்கும் சரீரமாகவும் உணர்கின்றாரோ…
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை: அத்தகையவருக்கு அவர்களின் பிராணனாகவும் சரீரமாகவுமே “இருக்கிறான் இறைவன்” என்று உணர்த்திக் கொண்டிருக்கிறான்.
ஒரு உன்னதமான அரபு பழமொழி கூறுகிறது:
எவன் தன் இறைவனுக்காக தன்னை வரையறுத்துக் கொள்கிறானோ, அவனுடைய இறைவன் தனக்காகவே அவனை வரையறுக்கிறான். ஆதாரம்: ஹில்யத் அல்-அவ்லியா’ 10/208
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு:
அவ்வாறு தம் பிராணனிலும், சரீரத்திலும் விளங்கிக் கொண்டிருக்கும் இறை ஆற்றலை உணர மறுப்பவர்களுக்கு…
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே:
உள்ளே இருக்கும் இறைசக்தியான பிராணன் வெளிக்கிளம்ப, அதனால் கட்டப்பட்ட சரீரமும் கட்டவிழிந்து போய் ஒன்றும் இல்லாமல் போக, உள்ளும் புறமுமாக புலப்படாமல் மறைந்திருந்த இறைச்சக்தியும் “இல்லை இறைவன்” என்று தன்னைத்தானே ஆக்கிக்கொண்டுவிடுகிறான்.
பைபிளில் மாற்கு 12:27ல் இயேசு “அவர் இறந்தவர்களின் கடவுள் அல்ல, உயிருள்ளவர்களின் கடவுள்” என்று பதிலளித்தது போல…
“எம்மிறை” என்பது இறப்பில்லா பெருவாழ்வை அடையும் பேற்றை கொண்டவர்களுக்குத்தானே அன்றி இறக்கப் போகின்றவர்களுக்கு அல்ல, என்னும் உட்கருத்தை உள்ளடக்கி திருமூலர் இத்திருமந்திரத்தை நமக்கு வழங்கியுள்ளார்.
திருச்சிற்றம்பலம்🙏🏿

