
“Your depression is connected to your insolence and refusal to praise.”-rumi
“உங்கள் மனச்சோர்வு உங்கள் ஆணவம் மற்றும் பாராட்ட மறுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.”-ரூமி
உள்ளச்சோர்வுக்கு காரணம் உள்ளொளி (ஆன்ம ஒளி) மங்குவதே. அன்பு உதயமாகாத போது உள்ளொளி மங்குகிறது. ஆணவம் மேலோங்கும் பொழுது அங்கு அன்பு மறைந்து போகிறது. ஆணவம் வெறுப்பாக மாறி. வெறுப்பு மற்றவர் செய்த நல்லசெயலை பாராட்ட மனமில்லாத மறுப்பாக ஆகிறது.
அதாவது பாராட்ட மனமில்லாத மறுப்பு அக்கணமே வெறுப்பாகி, அதன் காரணம் ஆணவம் மேலோங்கி, உள்ளன்பு மறைந்து, அது உள்ளொளியை மங்கச்செய்து, உள்ளச்சோர்வை உண்டாக்கி, சோகத்தில் தள்ளிவிடுகிறது. இவையனைத்தும் ஒருசேர ஒரே சமயத்தில் நிகழும்.
இதிலிருந்து மீள மற்றவர்களின் செயல்களை அவ்வப்போது பாராட்ட ஆரம்பித்தால், அதுமுதல் வெறுப்பு குறைந்து, அதன் காரணம் ஆணவம் குன்றி, உள்ளன்பு பெருக,
அது உள்ளொளியை பிரகாசிக்கச் செய்து, உள்ளச்சோர்வை நீக்கி, உற்சாகத்தையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் அளிக்கும். இவைகளும் ஒருசேர ஒரே சமயத்தில் நிகழும்.
ஆகவே ஒருவர் பாராட்ட மறுப்புடன் தம்மை இணைத்துக் கொள்ளாமல், பாராட்டும் தன்மையுடன் தம்மை இணைத்துக் கொண்டால், அதுவே தெளிந்த அறிவின் அடையாளமாகவும் மற்றும் தொடர்ந்த உற்சாகத்தின் அனுபவமாகவும் இருந்து கொண்டிருக்கும்.
சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் ஒவ்வொரு சிவஸ்தலங்கள் தோறும் சென்று அங்குள்ள இறைவனை பற்றியும் இறைவியை பற்றியும் போற்றி புகழ்ந்து பாடிக்கொண்டே வந்திருக்கிறார். அதாவது அவர் சதா சர்வ காலமும் பாராட்டும் தன்மையுடனே தம்மை இணைத்துக் கொண்டதால் ஸ்தலங்கள் தோறும் சென்று இறைவனின் புகழைப் பாடுவது ஒன்றே அவரது குறிக்கோளாக இருந்திருக்கிறது. அவ்- அன்பின் காரணம் சுத்த சிவஜோதி அவர் அகத்துனுள் உள்ளொளியாக பெருகி வியாபிக்க, உள்ளச்சோர்வு அறவே நீங்கி, தெளிந்த அறிவின் அடையாளமாக இருந்து கொண்டு, உற்சாகத்தை தொடர்ந்து அனுபவிக்கவும் முடிந்தது. மேலும் ஒவ்வொரு பத்து பதிகப் பாடல்களின் இறுதியில்,
ஞான சம்பந்தன் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!!! என்று முடிப்பதை பார்த்தால், அவர் தம்மைதாமே புகழ்ந்து கொள்வதுபோல் தோன்றும்.
உண்மையில் தான் புறத்தில் கண்ட சிவஜோதியே தம் அகத்திலும் உள்ளொளியாக இருந்து வியாபித்துக் கொண்டிருப்பதையும், மேலும் அதன் அருளாலேயே அவன் புகழ் பாடப்பட்டுக் கொண்டிருப்பதையும் உணர்ந்ததினால், திருஞானசம்பந்த பெருமான் புறத்தில் போற்றிப் பாடிய தம் இறைவனை, தம் அகத்துனுள் தம் நாமமாகவே விளங்கிக் கொண்டிருக்கும் இறைவனை, போற்றிப் பாராட்டவே “ஞான சம்பந்தன் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!!!” என்னும் வரிகளை பதிகமாக்கி உள்ளார்.
கிருஸ்துவ மதத்தில் சொல்லப்படும், “இறைவனை துதி” என்பதும், இஸ்லாத்தில் சொல்லப்படும் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்பதும் கூட சொல்பவர்களின் உள்ளச்சோர்வை போக்கி தொடர்ந்த உற்சாகத்தை அளிப்பதற்காகவே என்றும் கூட பொருள் கொள்ளலாம்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

