“என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்தது இல்லையே,
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்,
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே.”
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
-சிவவாக்கியர்.
Interpretation:
“I Am that I Am” “இருக்கிறவராக இருக்கிறேன்”
யாத்திராகமம் 3:14
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
என்னிலே இருந்திருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே:
இருந்திருந்திருந்து: இருக்கின்றவராகவே இருந்து, அதாவது ஸத்குரு எனப்படுபவர் ஒவ்வொருவரின் உள்ளேயே, அத்தகையவர் எவ்வுருவில் இருக்கிறாரோ அவ்வுருவாகவே அமைந்துபடியே இருந்து கொண்டிருக்கிறார். ஆகையால் தம் ஸத்குருவை ஒருவர் உள்ளது உள்ளபடியே அறிய விரும்பின், தம் இருப்பு எவ்வாறு அமைந்து உள்ளதோ, அவ்வாறாகவே தம் ஸத்குருவின் இருப்பும் தம்முள்ளேயே இருந்து கொண்டிருக்கின்றது என்பதினை, இடைவிடாத தியானத்தின் மூலம் தம்முள்ளேயே இருந்திருந்திருந்து உணர்ந்து கொள்ளலாம்.
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
அவ்வாறு தம்முள்ளேயே இருந்திருந்திருந்து உணர்ந்து கொண்ட அப்பரம்பொருளைப் பற்றிய அனுபவத்தை, காட்சிப் பொருளாக்கி யாவர்க்கும் உணர்த்தவோ அல்லது காணவைக்கவோ இயலாத ஒன்றாகிப் போனதால்…அத்தகைய அனுபவத்தை யாவர்காண வல்லரோ? என்கிறார் சிவவாக்கியர்.
அதாவது “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்று மூதுரை அருளியபடி இதே தன்மையில் இடைவிடாத தியானத்தின் மூலம் தம்முள்ளேயே இருந்திருந்திருந்து உணர்ந்து கொண்டிருப்பவர்களை தவிர வேறு “யாவர்காண வல்லரோ?” என்று பொருள் கொள்ளலாம்.
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்தது இல்லையே:
அவ்வாறு ஸத்குரு எனப்படுபவர் ஒவ்வொருவரின் உள்ளேயேயும், அத்தகையவர் எவ்வுருவில் இருக்கிறாரோ அவ்வுருவாகவே அமைந்துபடியே இருந்து கொண்டிருக்கிறார் என்பதை இதுவரை நான் அறியாமல் இருந்ததை..,
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்:
என் இருப்பு எவ்வாறு அமைந்து உள்ளதோ, அவ்வாறாகவே எம் ஸத்குருவின் இருப்பும் எம்முள்ளேயே இருந்து கொண்டிருக்கின்றது என்பதினை, இடைவிடாத தியானத்தின் மூலம் எம்முள்ளேயே இருந்திருந்திருந்து யான் அறிந்து கொண்டேன் என்பதாக சிவவாக்கிய சித்தரின் இப்பாடலுக்கு மெய்ப்பொருளாக கொள்ளலாம்.
மேலும் யான்’ என்பது ஒருமையில் பன்மை கலந்த சொல் எனக்கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலின் அதாவது ஸத்குருவின் அருளறிவும், சிவவாக்கிய சித்தரின் மெய்யின் அதாவது உடம்பின் அறிவும் இணைந்த தன்மையே ‘யான்’ என்னும் வெளிபாடாகும்.
“தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே” என்பது திருமூலரின் திருமந்திர வாக்கு. அதாவது ஒருவர் தமது உருவையே தம் குருவாக இடைவிடாது சிந்தித்தால் தெளிவு பிறந்துகொண்டேயிருக்கும்
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

