
ஒருவர் ஸத்குரு மூலமாகத்தான் இறையருளை அடைய முடியும் என்பது சனாதன தர்மத்தின் ஒருமித்த கோட்பாடு.
சரணாகதி அடைந்தால் முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, முயற்சி செய்வதால் சரணாகதி அடைய வேண்டிய அவசியம் இல்லை இதில் எது உண்மை என்பது எனது குருவிற்கு, அவர் ஆன்மீகத் தேடலில் இருந்த போது எழுந்த சந்தேகம். முறையாக எங்கும் விளக்கம் பெற முடியாத நிலையில் என் பரம குருவை, என் குரு அணுகிய போது அவரிடம் இருந்து கிடைத்த அற்புத விளக்கம்.
சரணாகதி அடைவதும் நீ தான், முயற்சி செய்வதும் நீ தான் இரண்டும் தனித்தனி நபர்கள் அல்ல. முதலில் உன் ஸத்குருவை தேடிக் கண்டு, அவரிடம் சரணாகதி அடைந்து, பின்பு அவரிடம் இருந்து பெற்ற மந்திர உபதேசத்தை முறையாக இடைவிடாது முயற்சி செய்வதன் மூலம் இறையருளை பெறலாம் என்பது என் பரமகுருவிடம் இருந்து என் குரு பெற்ற முதல் உபதேசம்!
“கௌதமரே நீர் கேட்ட பிரம்ம வித்தை (இறையருளை அடையும் வழி) உமக்கு முன் பிராமணரிடம் சென்றதில்லை, உலகம் முழுவதிலும் க்ஷத்திரியர்களுடையதாகவே இந்த போதனை இருந்து வந்திருக்கிறது” என்று சாந்தோக்கியோபநிஷத்து 3.7ல் சொல்லப்பட்டுள்ளது.
ஆகையால் இறையருளை உண்மையில் அடைய விரும்புவர்களுக்கு பூனை மற்றும் குரங்கு அதாவது அகம்பாவம் இல்லாமல் முழுசரணாகதி அடையும் பிராமணத் தன்மை, மற்றும் வைராக்கியத்தோடு முயற்சிக்கும் க்ஷத்திரிய தன்மை இவ்விரண்டும் ஒரு சேர இருத்தல் மிகவும் அவசியம் என்பது உபநிஷத் வாக்கு.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

