“பாவத்தின் சம்பளம் மரணம்”

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து 

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்

அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல்

அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.  (:சிவவாக்கியம் -023)

“அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து 

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்”

‘நமசிவாய’ எனும் அஞ்செழுத்தின் சப்தம் பஞ்ச பூதங்களில் ஒடுங்கியுள்ளது. ‘ந’ என்ற எழுத்து நிலத்திலும். ‘ம’ என்பது நீரிலும், ‘சி’ என்பது நெருப்பிலும், ‘வ’ என்பது காற்றிலும், ‘ய’ என்பது ஆகாயத்திலும் அல்லது வெட்டவெளியிலும் ஒடுங்கியுள்ளது.

ஒவ்வொரு மானுட வடிவும் பஞ்சபூதங்களின் மூலத்தாலேயே உருவாகி வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு உடம்பிலும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று ஆகாயம் என்னும் பஞ்சபூத தன்மைகளும், ‘நமசிவாய’ எனும் அஞ்செழுத்தின் சப்தத்துடன் இரண்டற கலந்து  ஒடுங்கப் பெற்றுள்ளது.

இத்தகைய சிவமயமான அஞ்செழுத்தாலேயே பிறந்த உடல் வளரும்போது, அதனுடன் இவ்-அஞ்செழுத்தும் உடன் வளர்கிறது என்ற ஞானமே இல்லாமல், வெறும் நாவினால் பஞ்சபூத உணர்வே இல்லாமல்  இவ்-அஞ்செழுத்தை ஓதுகின்றவர்கள்,  பஞ்சபூதங்களின் புனிதத்தன்மையை கெடுத்து அதன்மூலம் பஞ்சபூத பாவிகளாக ஆக்கப்படுகின்றார்கள். 

பாவத்தின் சம்பளம் மரணம்; என்று பைபிளில் ரோமர் 6:23 சொல்லப்பட்டுள்ளது போன்று, இவ்வாறு முறையாக உணராது அஞ்செழுத்தை ஓதுபவர்கள் பாவிகளாக ஆக்கப்பட்டு மரணத்தை சம்பளமாக பெறுகின்றனர்.

அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல்:

பிருஹதாரணியகோபநிஷத்து 7:3 இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது:

“எவர் பூமியில்(நிலத்தில்) இருந்து கொண்டு பூமியில் உறைகிறாரோ, எவரை பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு பூமி உடலாகின்றதோ, எவர் பூமியின் உள்நின்று அதை ஆள்கின்றாரோ அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர், அதுவே ‘ந’ என்ற எழுத்தின் சப்தமாக ஒவ்வொரு மானுட உடம்பினுள்ளும் உறைந்து இருக்கிறது”  இதுபோன்றே ‘நமசிவாய’ எனும் அஞ்செழுத்தில் மற்ற நான்கு எழுத்துக்களின் சப்தங்களும்,  மானுட தேகத்தில் விளங்கும்  நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் மற்ற நான்கு பூதங்களிலும் இவ்வாறே அந்தர்யாமியாக உறைந்து இருக்கிறது.

அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே:

எனவே அஞ்செழுத்தில் ஓர் எழுத்து, ஓர் பூதத்தில் இவ்வாறு உறைந்து இருப்பதை முறையாக உணர்ந்து அறிந்து, அதன்பின்னர் அஞ்செழுத்தை கூறும் வல்லமை படைத்தவர்களின் அம்பலத்தில், ‘நாதன் அஞ்சல் அஞ்சல் என்று ஆடுவான்’. 

திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment